2016-09-30 16:07:00

அசீரிய-கல்தேய சமூகத்தைச் சந்தித்தபோது திருத்தந்தையின் செபம்


எம் ஆண்டவராகிய இயேசுவே,

உம் சிலுவையை ஆராதிக்கிறோம்.

ஒவ்வொரு பிளவு மற்றும் தீமையின் காரணமாக இருக்கும் பாவத்திலிருந்து அச்சிலுவையே விடுதலை வழங்குகிறது.

நாங்கள் உம் உயிர்ப்பை அறிக்கையிடுகின்றோம்.

உயிர்ப்பே மனிதகுலத்தை அதன் தோல்வி மற்றும் மரணத்திலிருந்து விடுவிக்கிறது.

நீர் மகிமையுடன் வரும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

அதுவே, நீதி, மகிழ்வு, மற்றும் அமைதி என்ற உம் அரசை, முழு நிறைவுக்குக் கொணர்கிறது.

பகைமை, மற்றும் சுய நலத்தால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எம் இதயங்களின் கடினத்தன்மையை, இயேசுவே, நீர் வெற்றிகொள்ளும்.

அநீதியால் பாதிக்கப்பட்டோரை உம் உயிர்ப்பின் வழியாக மீட்டருளும்.

உம்முடைய வருகையின் வழியாக, மரணக் கலாச்சாரத்தை எதிர்கொண்டு, அந்த வெற்றி ஒளியை ஒளிர்விடச் செய்தருளும்.

குழந்தைகளை, முதியோரை, சித்ரவதைக்குள்ளாகும் கிறிஸ்தவர்களை, உம் சிலுவையில் இணைத்தருளும்.

காயமடைந்தோரையும், உரிமைகள் மறுக்கப்பட்டோரையும், அகதிகளையும், வாழ்வில் மகிழ்ச்சியை இழந்தோரையும் அரவணைத்து, பாஸ்கா ஒளியை அளித்தருளும்.

போரில் ஈடுபடும் மக்கள் மேல் உம் சிலுவையின் நிழல் படர்வதாக.

அதன் வழியாக, அவர்கள், ஒப்புரவு, உரையாடல் மற்றும் மன்னிப்பின் வழிகளை கற்றுக்கொள்வார்களாக.

ஈராக்கையும், சிரியாவையும், காப்பாற்றியருளும்.

அப்பகுதியின் கிறிஸ்தவர்களுக்கு உரமூட்டி, விசுவாசம் மற்றும் அன்பில் இணைத்தருளும்.

சிலுவையின் அடியில் நின்ற அன்னையே,

எம் பாவங்களுக்காக, உம் மகனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுத் தாரும்.

இயேசுவின் உயிர்ப்பின் வெற்றியை, எவ்வேளையிலும் சந்தேகிக்காத நீர்,

எங்கள் விசுவாசம், மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியருளும்.

மகிமையின் அரசியே, பணிபுரிவதன் பாதையையும் அன்பின் மகிழ்வையும்

எமக்குக் கற்றுத் தாரும்.

ஆமென்.








All the contents on this site are copyrighted ©.