2016-09-29 16:01:00

காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க இராணுவ வீரர்கள் புதிய முயற்சி


செப்.29,2016. காஷ்மீரில் பதற்றத்தைத் தணிக்கும் புதிய முயற்சிகளை, இந்திய இராணுவம் கையாளத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டு ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி என்பவர் கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறையும், பதற்றமான சூழலும், தொடர்ந்து நீடிப்பதால், காஷ்மீர் பகுதிகளில், 80 நாள்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில், தனியார் வாகனங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. எனினும், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை தொடர்ந்து மூடியே கிடக்கின்றன.

இப்படிப்பட்டச் சூழலால், காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியை போக்க, அனந்த்நாக் மாவட்டத்தின் இராணுவப் பொறுப்பாளர், கர்னல் தர்மேந்திர யாதவ் தலைமையிலான வீரர்கள், புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மிகவும் பதற்றமான பகுதிகள் அடங்கிய அனந்த்நாக் மாவட்டத்தில், தனது கட்டுப் பாட்டுக்கு உட்பட்ட கிராமங்களில், கர்னல் தர்மேந்திர யாதவ் அவர்கள், ஊர்மக்கள், முதியவர்கள், சிறுவர்களைச் சந்தித்து, கலந்துரையாடுவதோடு, வர்த்தகர்களைச் சந்தித்து, சட்டம் ஒழுங்கு குறித்த நம்பிக்கை அளித்து, கடைகளைத் திறக்கச் சொல்கிறார்.

பள்ளிகள் திறக்காததால், மாணவர்களின் படிப்பு நிலவரம் குறித்து அக்கறையோடு விசாரிக்கும் கர்னல் தர்மேந்திர யாதவ் அவர்கள், துயரத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களையும், சிறுவர்களையும் பரிவோடு அணைத்து ஆறுதல் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

புர்ஹான் வானி ‘என்கவுன்டர்’ நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் இராணுவ வீரர்களில் தர்மேந்திர யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.