2016-09-28 16:35:00

திருப்பீடம்: அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதே நம் இலக்கு


செப்.28,2016. 'அகில உலக சமுதாயத்தின் ஒவ்வொரு நாடும், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதை தங்கள் இலக்காகக் கொண்டு செயல்படவேண்டும்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. உலக அவையில் விடுத்த விண்ணப்பத்தை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இச்செவ்வாயன்று ஐ.நா. அவை ஒன்றில் மீண்டும் நினைவுகூர்ந்தார்.

IAEA எனப்படும், அகில உலக அணு சக்தி அமைப்பு, வியன்னாவில் மேற்கொண்ட 60வது பொது அமர்வில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர், அருள்பணி Antoine Camilleri அவர்கள், அணு ஆயுதங்களின் முழுமையான ஒழிப்பிற்கு, திருப்பீடம் தன் ஆதரவை எப்போதும் வழங்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையில், "ஒருவர் ஒருவரை அழித்தல் என்பது, சட்டங்களாகவும், நன்னெறி விழுமியங்களாகவும் அமைந்துவிட்டால், அது, உலக சமுதாயத்தின் மீது நம்பிக்கையைக் குலைத்துவிடும்" என்று கூறியதை, அருள்பணி Camilleri அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்று, உலக நாடுகள், ஒருவர் ஒருவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்துவருவதை தடுக்கவேண்டுமென்றால், அது, பொறுப்புள்ள நன்னெறியையும் உரையாடலையும் வளர்ப்பதில் அடங்கியுள்ளது என்று, அருள்பணி Camilleri அவர்கள் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பான அணுசக்தி, முழுமையான, மற்றும், நீடித்த மனித முன்னேற்றம், CTBTO எனப்படும் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம், அணுசக்தியைப் பயன்படுத்துவதை கண்காணிக்கும் ஒரு பொதுவான அமைப்பு என்ற தலைப்புக்களில், அருள்பணி Camilleri அவர்கள் வியன்னாவில் தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.