2016-09-28 15:31:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : 'சிலுவையில் மன்னிப்பு'


செப்.,28,2016. கோடை காலம் முடிவடைந்து, குளிர்காலத்தின் துவக்கத்தில் உரோம் நகர் இருந்தாலும், பகல் நேரத்தில் மிதமான வெப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் உரோம் நகரில் குறைந்ததாகத் தெரியவில்லை. இப்புதனன்றும், உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பயணிகள், சுற்றுலாப் பயணிகள் என மக்கள் பெருமெண்ணிக்கையில் குழுமியிருக்க, தன் யூபிலி மறைக்கல்வியின் தொடர்ச்சியாக 'சிலுவையில் மன்னிப்பு' என்ற தலைப்பில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் பாடுகளின்போது இயேசு கூறிய வார்த்தைகள், மன்னிப்பில் தன் உச்சக்கட்டத்தை அடைகின்றன. 'தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23: 34)  என்கிறார் இயேசு. நல்ல கள்வனைப் பொருத்தவரையில் இது வெறும் வார்த்தைகள் அல்ல, ஏனெனில், இயேசு அவனை உண்மையாகவே மன்னிக்கிறார்.  தீய கள்வனுக்கோ, மெசியாவும், சிலுவையில் தொங்கிய வண்ணம், தன்னையே காப்பாற்றமுடியாமல் இருக்கும் நிலையை புரிந்துகொள்ள‌ முடியவில்லை. ஆனால், இவ்வாறு சிலுவையில் தொங்கியதன் வழியாகத்தான், ஒவ்வொரு மனிதருக்கும், அவர்கள் எச்சூழலில் இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும் மீட்பை வழங்குகிறார், இயேசு. இந்த யூபிலி ஆண்டானது, அனைவருக்கும், அதாவது, நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், நலத்துடன் இருப்போருக்கும் துன்புறுவோருக்கும், என அனைவருக்கும் இரக்கம் மற்றும் அருளின் காலம்.  கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதை நினைவுகூரும் காலம் இது (உரோமை. 8:39).  மருத்துவமனையில் நோயுற்றிருப்போர், சிறைகளின் சுவர்களுக்குள் வாழ்ந்துகொண்டிருப்போர், போரால் சிக்குண்டிருப்போர் என அனைவரின் சார்பாக நாம்,  சிலுவையில் தொங்கும் இயேசுவை உற்று நோக்குமாறு அழைப்பு பெறுகிறோம். சிலுவையில் தொங்கியபடியே நம்மோடு இணைந்து, நம் மீட்பராக தன்னையே நமக்கு வழங்கும் இயேசுவை உற்று நோக்குவோம். நாம் எவ்வாறு கடவுளை அணுக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் நல்ல கள்வன் நமக்கு உதவுகின்றார். இறைவன் குறித்து அச்சம் கொள்ளாமல், அவரின் வல்லமையிலும், முடிவற்ற நன்மைத்தனத்திலும் நம்பிக்கைக் கொண்டவர்களாக செயல்பட கற்றுத் தருகிறார், நல்ல கள்வன். நாம் இத்தகைய வழியில் இறைவனை அணுகும்போது, நம் வாழ்வின் எத்தகைய இருளான வேளைகளிலும்கூட அவரின் இரக்கத்தில் நம்மைக் கையளிக்கிறோம். பாவிகளாகிய நம்முடன் இறைவன் என்றுமிருக்கிறார், மற்றும், சிலுவை மரணம் வரை நம்மை அன்புகூர்கிறார். கடவுளின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையின் ஓர் எடுத்துக்காட்டினை நல்ல கள்வனில் காணும் நாம், அவரைப் போலவே, இயேசுவை, பெயர் சொல்லி அழைத்து, வானுலகில் அவர் நம்மையும் நினைவுகூரும்படி கேட்டுக்கொள்வோம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அலெப்போ நகரின் துன்ப நிலைகள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அங்கு துன்புறும் மக்களுடன் தன் ஆன்மீக நெருக்கத்தையும் செப ஒன்றிப்பையும் வெளியிடும் அதேவேளை, அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவேண்டியது, அனைவரின் கடமை என்பதையும் நினைவுறுத்தி, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.