2016-09-28 16:55:00

இரக்கத்தை மையப்படுத்தி, கொழும்பு சிறாரின் கண்காட்சி


செப்.28,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை சிறப்பிக்கும் வகையில், கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 800 சிறுவர், சிறுமியர், இறைவனின் இரக்கம் என்ற மையக்கருத்துடன் ஒரு கண்காட்சியை உருவாக்கினர்.

இயேசுவின் வாழ்விலும், விவிலியத்திலும் இரக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை, சித்திரங்களாகவும், பொம்மை காட்சிகளாகவும் இச்சிறுவர் சிறுமியர் வடிவமைத்தனர்.

கனுவனவின் (Kanuwana) புனித யோசேப்பு பங்குக்கோவிலில் மறைக்கல்வி வகுப்புக்களில் பயின்றுவந்த 650 மாணவ, மாணவியர், மற்றும் விஷகவட்ட (Vishakawatta) பங்குத் தளத்தின் 170 மாணவ, மாணவியர் இணைந்து கடந்த சில மாதங்களாக உருவாக்கி வந்த கலைப்படைப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.                      

சிறுவர் சிறுமியர் தங்கள் கலைத்திறமைகளை வெளிக்கொணர்வதோடு,  இரக்கத்தின் யூபிலி ஆண்டின் உட்பொருளை புரிந்துகொள்வதற்கும் இந்த முயற்சி வழிவகுத்தது என்று, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இளையோர் பணி ஒருங்கிணைப்பாளர், அருள்பணி பிரெட்டி ஷாந்தில்குமார் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.