2016-09-28 15:40:00

இரக்கத்தின் தூதர்கள்:இரக்கத்தின் திருப்பணி - தூய பாத்ரே பியோ


செப்.28,2016. “ஆண்டவரிடம் செபியுங்கள், அவரிடம் நம்பிக்கை வையுங்கள், கவலைப்படாதீர்கள். கவலைப்படுவது பயனற்றது. கடவுள் இரக்கமுள்ளவர். அவர் உங்கள் செபத்தைக் கேட்பார்”;“ஆண்டவரே, எனது கடந்த காலம் உமது இரக்கத்தில், எனது நிகழ்காலம் உம் அன்பில், எனது வருங்காலம் உம் பராமரிப்பில்”. இவ்வாறு சொன்னவர், இத்தாலிய மொழியில் தந்தை என்ற பொருளில் அன்போடு அழைக்கப்படும் தூய பாத்ரே பியோ. இவர் இருபதாம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமடைந்திருந்த தூயவர்களில் ஒருவர். 2002ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பாத்ரே பியோ அவர்களை, புனிதர் என அறிவித்த திருப்பலியில், ஏறத்தாழ மூன்று இலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டதே, இத்தூயவரின் சிறப்பைக் காட்டுகின்றது. உலகெங்கும் மக்கள் இவர்மீது இவ்வளவு பக்தி கொண்டிருப்பதற்கு இவர் ஆற்றியது என்ன?, இவரின் வாழ்வு எப்படி அமைந்திருந்தது? இவர் இறந்த மூன்று ஆண்டுகள் சென்று, அதாவது, 1971ம் ஆண்டில், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பாத்ரே பியோ அவர்கள் சேர்ந்திருந்த கப்புச்சின் துறவு சபையின் தலைவர்களிடம், பாருங்கள், இவர் உலகளவில் எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறார், அது ஏன்? இவர் ஒரு மெய்யியலாளர், இவர் முன்மதியுடையவர், இவர் தனது வளங்களை எல்லார் முன்னிலையிலும் வைத்தவர், மிகவும் தாழ்மையுடன் திருப்பலி நிறைவேற்றியவர், வைகறை தொடங்கி, கதிரவன் மறையும்வரை ஒப்புரவு அருளடையாளம் கேட்டவர் அல்லது நம் ஆண்டவர் இயேசுவின் காயங்களைக் கொண்டிருந்தவர் என்பதற்காகவா?, இல்லை, பாத்ரே பியோ, செப மனிதராக, துன்புறும் மனிதராக இருந்தார் என்பதற்காகவே இவ்வளவு புகழ் அடைந்திருக்கிறார் என்று கூறினார்.

பாத்ரே பியோ அவர்களின் இயற்பெயர் பிரான்சிஸ் ஃபோர்ஜியொன். இவர், இத்தாலியின் பியட்ரல்சினாவில், 1887ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது பத்தாவது வயதுவரை, தன் குடும்பத்தின் ஆடுகளை மேய்த்து வந்தார். கல்லைத் தலையணையாக வைத்துப் படுப்பது, கல்தரையில் உறங்குவது போன்ற தவச் செயல்களை இளவயதிலே செய்தார். இதற்காக இவர் தன் தாயிடம் அடிவாங்கியிருக்கிறார். ஏனென்றால், குளிர் நாடாகிய இத்தாலியில், குளிர்காலத்தில் வெறும் கல்தரையில் படுத்துறங்குவது மிகவும் கடினம். 1903ம் ஆண்டு சனவரி 6ம் தேதி, தனது 15ம் வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவதுறவியாகச் சேர்ந்த இவர், சனவரி 22ம் தேதி துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பத்திநாதரின் பெயரை, தனது துறவறப் பெயராக ஏற்றுக்கொண்டார். பத்திநாதர் என்பதற்கு, இத்தாலிய மொழியில் பியோ என்பதாகும். இவர், 1910ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். சிறிது காலம் சென்று, நுரையீரல் தொற்றுநோயால் இவர் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டதால், வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916ம் ஆண்டு செப்டம்பர் 4ம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார். அதே ஆண்டில், சான் ஜொவான்னி ரொத்தோந்தோ என்னும் ஊரிலுள்ள கப்புச்சின் துறவு இல்லத்திற்குச் சென்றார். அங்குதான் அவர் கடைசிவரை வாழ்ந்தார். இடையில் இராணுவத்தில் பணியாற்றுவதற்கு மட்டும் சென்றார் இவர். பாத்ரே பியோ அவர்கள் தனது 81வது வயதில், 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, மரியா என்ற சொல்லை உச்சரித்து தனது இறுதி மூச்சை விட்டார்.  

ஐரோப்பாவில் முதல் உலகப்போர் நடந்த சமயம் அது. பாத்ரே பியோ அவர்கள், 1917ம் ஆண்டில் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். இத்தாலிய மருத்துவக் குழுவில் 100வது பிரிவில் பணியாற்றியபோது உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும், மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குனராகச் செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார். பின்னர், 1918ம் ஆண்டில், மார்ச் மாதத்தில், இராணுவப் பணியிலிருந்து சான் ஜொவான்னி ரொத்தோந்தோ திரும்பினார். அவ்வாண்டு ஜூலையில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இந்தப் போரை, ஐரோப்பாவின் தற்கொலை என்று சொல்லி, இப்போர் நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவர்களைச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாண்டு ஜூலை 27ம் தேதி, பாத்ரே பியோ அவர்கள், இந்தப் போர் முடிவதற்குத் தன்னையே ஒரு பலியாக அர்ப்பணித்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 7ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில், இவருக்கு கிறிஸ்து காட்சியளித்து, இவரை விலாவை ஊடுருவினார். அதன் பயனாக, பாத்ரே பியோ அவர்கள், தனது விலாவில் காயத்தைப் பெற்றார். இந்த அனுபவம், இறைவனோடு அன்பில் ஒன்றியதாக இருந்தது. இந்த அனுபவம் பற்றி பெனெதெத்தோ என்று அருள்பணியாளருக்கு கடிதம் வழியாக விவரித்திருக்கின்றார்.

ஆகஸ்ட் 5ம் தேதி மாலையில், சிறுவர்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விண்ணக மனிதர் தோன்றியதைப் பார்த்து பயந்து நடுங்கினேன். அவர் தனது கையில் ஒரு நீள கூர்மையான இரும்புப் பிளேடு போன்ற ஆயுதம் வைத்திருந்தார். அது நெருப்பைக் கக்குவது போல் இருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த மனிதர் அந்த ஆயுதத்தை, எனது ஆன்மாவில் அவரது பலம் கொண்ட மட்டும் சுழற்றி வீசியது போன்று இருந்தது. நான் இறப்பது போன்ற வேதனை அனுபவித்தேன். அந்த ஆயுதத்தால், எனது குடல்கள்கூட கிழிக்கப்பட்டது போன்று உணர்ந்தேன். அந்தக் காயம் என் ஆன்மாவின் ஆழத்தில் எப்போதும் திறந்து இருந்தது. அது தொடர் வேதனையைத் தந்தது. தொடர்ந்து ஒப்புரவு அருளடையாளம் கேட்க முடியாமல் இருந்ததால், சிறுவர்களைப் போகும்படிச் சொன்னேன். 

பாத்ரே பியோ அவர்கள், இளம் வயதிலேயே விண்ணக காட்சிகளைக் கண்டார் எனச் சொல்லப்படுகிறது. இக்காட்சிகள், இவர் உடலில் தாங்கிய இயேசுவின் காயங்கள் மற்றும் இவரது வாழ்வு பற்றி அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.