2016-09-28 16:42:00

இயேசுவின் திருமுகத்திற்குமுன் கூடிவந்தது, பொருளுள்ள நிகழ்வு


செப்.28,2016. ஒரே இறைவனை விசுவசிக்கும் கத்தோலிக்கர்கள், மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், அந்த இறைவனின் வெளிப்படையான வடிவமாக இவ்வுலகிற்கு வந்த இயேசுவின் திருமுகத்திற்கு முன் கூடிவந்து பொதுவான வழிபாட்டில் ஈடுபட்டது, பொருளுள்ள ஒரு நிகழ்வு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்கள், அண்மையில், இத்தாலியின் Chieti-Vasto எனுமிடத்தில், கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் அவைகளுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்து, CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின்போது, Chieti-Vastoவில் உள்ள, கிறிஸ்துவின் திருமுகம் பசிலிக்காவில் நடைபெற்ற இணைந்த திருவழிபாட்டை, தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் கோக் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைவன் இரக்கத்தின் முகமாக விளங்கும் இயேசுவின் திருமுகத்திற்கு முன்னர், இந்த ஒன்றுபட்ட வழிபாடு நிகழ்ந்தது பொருத்தமானது என்று கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் ஒருவர் ஒருவருக்கு அளிக்கக்கூடிய கொடைகளே, ஒன்றிப்பு என்ற முயற்சியில் ஆழப்பொதிந்திருக்கும் உண்மை என்று சுட்டிக்காட்டிய கர்தினால் கோக் அவர்கள், மனித குலத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் கொடையான இயேசுவின் திருமுகத்திற்கு முன், கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து வந்தது பொருள் மிக்க அடையாளம் என்று கூறினார்.

1054ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து ஆர்த்தடாக்ஸ் அவை பிரிந்தது என்றும், 1965ம் ஆண்டு, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல், மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை அதனகோரஸ் ஆகிய இரு தலைவர்களின் முயற்சியால் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் ஒருங்கிணைப்பு துவங்கியது என்றும் CNA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.