2016-09-27 16:26:00

திருத்தந்தை, யூதமதத் தலைவர்கள் சந்திப்பு


செப்.27,2016. புலம்பெயர்ந்தவர்கள், ஐரோப்பாவை வளமடையச் செய்கின்றனர் என்பதை, அக்கண்டம் அடிக்கடி மறந்துபோகின்றது மற்றும் அவர்கள், சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூதமதக் குழு ஒன்றிடம் கூறினார்.

வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்தில், இத்திங்கள் மாலையில், உலக யூதமத அவையின்(WJC) பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, ஐரோப்பா, தனது கதவுகளை மூடிக்கொள்கின்றது, அக்கண்டத்திற்குப் படைப்பாற்றல்திறன் குறைவுபடுகின்றது, பிறப்பு விகிதமும் குறைந்து வருகின்றது மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையும் அதிகரித்து வருகின்றது என்றும் கூறினார்.

புலம்பெயர்ந்தவர்களை, சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டியது இன்றியமையாதது என்றும், பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள், சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாதவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

யூதர்களின் Rosh Hashanah புத்தாண்டுக்கு, தனது நல்வாழ்த்துக்களையும் முன்கூட்டியே தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இப்பிரதிநிதிகளை வழிநடத்திச் சென்ற, WJC அவையின் தலைவர் Ronald Lauder அவர்கள், யூதர்கள் எல்லாருமே புலம்பெயர்ந்தவர்கள்தான் என, திருத்தந்தையிடம் தெரிவித்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.