2016-09-27 16:13:00

ஆன்மீகத் தனிமையை அகற்ற மதுபானங்கள் அல்ல, செபமே உதவும்


செப்.27,2016. நம் இன்னல்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு, போதை மாத்திரைகள் அல்லது மதுபானங்களை நாடிச் செல்வதைவிட, இறைவனிடம் செபிப்பது, அவற்றை எதிர்கொள்ள உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நம் ஆன்மீக வாழ்வில் ஏற்படும்  தனிமையை அகற்றுவதற்கு, மதுபானங்களோ அல்லது போதை மாத்திரைகளோ உதவமாட்டா, ஆனால், அதற்குச் செபமும், அமைதியாக இருத்தலுமே உதவும் என்று கூறினார்.

ஆன்மீகத் தனிமையில் துன்புற்ற யோபு, தன் துன்பங்களைக் கடவுளிடம் முறையிட்டது பற்றிக் கூறும் இந்நாளைய முதல் வாசகத்தை  மையப்படுத்தி தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, நாம் எல்லாருமே, ஆன்மீகத் தனிமையின் இருளான நேரங்களை அனுபவிக்கிறோம் என்று கூறி, இந்நேரங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று விளக்கினார்.

குடும்பத்தில் துன்பங்களையும், நோய்களையும் எதிர்கொள்ளும்போதும், ஏதோ பெருஞ்சுமை நம்மை அழுத்துவதுபோல் உணரும்போதும், இத்தகைய இருளான நேரங்களில் நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, இந்நேரங்களில், யோபு போன்று, ஆண்டவரை நோக்கி, சப்தமாகச் செபிக்க வேண்டும் என்று கூறினார்.

அமைதியாக இருத்தல், ஆண்டவருக்கு மிக நெருக்கமாக இருத்தல், செபம் ஆகியவை, துன்புறும் மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் இருளான நேரங்களில், வார்த்தைகளும், பேச்சுக்களும் ஊறு விளைவிக்கும் என்று எச்சரித்தார்.

வாழ்வில் நம்பிக்கையிழந்து, ஏன் இத்துன்பம் என்ற கேள்விகளைக் கேட்கும் இருளான நேரங்களில் இருக்கும்போது, நம்மில் ஏற்படும் ஆன்மீகத் தனிமையை நாம் ஏற்க வேண்டும் என்றும், அந்நேரங்களைப் புரிந்துகொள்வதற்கு ஆண்டவரிடம் அருள்வேண்டிச் செபிக்க வேண்டும் என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.