2016-09-26 17:36:00

சிரியாவின் படுகொலைகளை நிறுத்த சிறாரின் செபநாள்


செப்.26,2016. அலெப்போ நகரிலும், சிரியா நாடு முழுவதிலும் தொடர்ந்து பெருமளவில் மக்கள், குறிப்பாக, குழந்தைகள், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுவருவது நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன், செப நாள் ஒன்றை, அலெப்போ நகர் சிறுவர், சிறுமியர் திட்டமிட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் 6ம் தேதி அலெப்போ நகரின் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுவர், சிறுமியர் இணைந்து திட்டமிட்டுள்ள செப வழிபாட்டிற்குப்பின், அனைவரும் ஒன்றிணைந்து, தங்கள் கையெழுத்து, அல்லது, கைவிரல் பதிவுகளை இட்டுள்ள ஓர் அமைதி விண்ணப்பத்தை, உலகத் தலைவர்களுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

மற்ற அனைவரின் செபத்தைக் காட்டிலும், குழந்தைகளின் செபம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதில் நம்பிக்கை கொண்டு, சிறார் மேற்கொள்ளும் செபத்தை ஊக்குவிப்பதாக, அலெப்போ ஆர்மீனியப் பேராயர், பூத்ரோஸ் மரயாத்தி (Boutros Marayati) அவர்கள் கூறினார்.

பல நூறு சிறார் பங்கேற்கும் இந்த செப வழிபாட்டில், பள்ளி மாணவ, மாணவியரின் பங்கேற்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஃபீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஆதாரம் :  Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.