2016-09-24 15:50:00

பொதுக்காலம் - 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


30 வயது நிறைந்த ஓர் இளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞரை, பல இசைக்குழுக்கள் தேடிவந்தன. மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.

புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத் தேடி வந்துள்ளது.

செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், ‘நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை’ வழியாக இயேசு கூறினார். அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இவ்வுவமையின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் (16:19-21) காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில், இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.

செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:

•             செல்வர் ஒருவர் இருந்தார்.

•             விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.

•             நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:

•             இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.

•             அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.

•             அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.

•             செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.

•             நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. “செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” என்பது முதல் ஒப்புமை. செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே, கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வருக்கு ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின் சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார். இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில் தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.

'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய ஏற்பாட்டில் காணப்படும், ‘எலியேசர்’ என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர், இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால் பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.

இந்த முதல் ஒப்புமை நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கிய பாடம், நாம் ஏழைகளை எவ்விதம் மதிக்கிறோம் என்பதே. நம் இல்லங்களில் பணியாற்றுவோரின் பெயர்களை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களை மரியாதைக் குறைவாய், ஏக வசனத்தில், "ஏய், அடியே, இவனே" என்று அழைப்பது தவறு என்பதை, இந்த உவமையின் அறிமுக வரிகளில் இயேசு சொல்லித் தருகிறார்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.

அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம், சிவப்பு. செல்வர் தன்னைத்தானே  ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். ‘யூதர்களின் அரசன்’ என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது, இந்த இரண்டாவது ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமையில் நாம் காணும் வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.

•             செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

•             இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.

•             செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.

•             நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகளை ஏவிவிட்டு, இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர், இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.

இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்ற குறைந்தபட்ச உணர்வு செல்வருக்கு இருந்தது என்று நம்மால் சொல்லமுடியும். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும், அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை,  நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை, அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக “இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.

ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது, அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல், அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப்போல் ஒருவரை நடத்துவது, மிகவும் கொடுமையான தண்டனை. இத்தகையத் தண்டனையை, அச்செல்வர், இலாசருக்கு வழங்கியதால்தான் அவர் நரக தண்டனை பெற்றார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள்கூட இலாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும், இயேசு, இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும், இலாசரும், ஒன்று. தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை; அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது, நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருந்ததா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில், ஆயிரத்தில் ஒரு பகுதியை, இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகத்தை நாம் தெரிவு செய்கிறோம் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது, அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது, அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல், செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு, கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதைக் காட்டிலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.