2016-09-24 16:35:00

எச்சூழலிலும் அன்பு மன்னிப்பு மற்றும் பிறர் மதிப்பே நம் பதில்


செப்.24,2016. பயங்கரவாதத்தின் விளைவால் இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்து வாழும் மக்களுடன், தானும், முழு திருஅவையும் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 14ம் தேதி நீஸ் (Nice) நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த, மற்றும், படுகாயமுற்ற மக்களின் உறவினர்களை இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து, ஆறுதல் கூறி, உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் ஆறுதலையும், நெருக்கத்தையும் செப உறுதியையும் தெரிவிப்பதாகக் கூறினார்.

ஒவ்வொருவரும் அமைதியிலும் சகோதரத்துவ உணர்விலும் வாழ, இறைவனை வேண்டுவதாகவும் உரைத்த திருத்தந்தை, இத்தாக்குதலுக்குப்பின் உடனடியாக முன்வந்து உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் தன் நன்றியை வெளியிடுவதாகவும் கூறினார். 

அனைத்து சமுதாயங்களிலும், நேர்மையான பேச்சுவார்த்தைகளும், சகோதரத்துவ உணர்வுகளும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

பகைமைக்கு பகைமையாலும், வன்முறைக்கு வன்முறையாலும் பதிலிறுக்கும் சோதனையைக் கைவிட்டு, தீயோனின் தாக்குதல்களுக்கு மன்னிப்பு, அன்பு மற்றும் மற்றவர்மீது கொள்ளும் மதிப்பு மூலம் பதில் சொல்வோம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.