2016-09-24 16:52:00

அனைத்து இரக்கப்பணிகளிலும் செபமே நம் ஊக்க மருந்து


செப்.24,2016. இனம், மொழி, கலாச்சாரம் என்ற பாகுபாடு ஏதுமின்றி, அனைத்து நோயாளிகளுக்கும் ஆறுதல் தந்து, பணியாற்ற வேண்டிய கடமையை வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் மருத்துவமனை அருள்சகோதரிகள் சபை என்ற துறவு சபையின் பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றிருப்போரின் ஆறுதலாக, துணையாக இருந்து செயல்படவேண்டியது, மருத்துமனைகளில் பணிபுரியும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் கடமை என்றும், இத்தகையப் பணியில் ஊக்க மருந்தாகச் செயல்படுவது, அவர்களின் செபமே எனவும் கூறினார்.

மதச் சார்பற்ற நிலையை வளர்க்கத் துடிக்கும் இன்றைய உலகில், மருத்துவமனை பணிகளிலிருந்து மதக்குறியீடுகளை அகற்ற முயலும் நிலைகளையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மருத்துமனைகளில் நோயால் துன்புறும் ஒவ்வொருவரிலும் இயேசுவைக் கண்டு, ஒரு நண்பராக, சகோதரியாக, தாயாக செயல்பட்டு, அந்நோயாளிக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்குவோம் எனவும், அத்துறவு சபை அருள்சகோதரிகளிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவுக்கும், நோயுற்றோருக்கும் அருகாமையில் இருப்பதை ஒரு பலமாக எண்ணிக்கொண்டு செயல்படுவோம் எனவும், இரக்கத்தின் மருத்துவமனை அருள்சகோதரிகளிடம் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.