2016-09-22 10:02:00

கொலையுண்ட மெக்சிகோ குருக்களுக்காக திருத்தந்தை அனுதாபம்


செப்.21,2016. "மற்றவர்களை, இறைவனின் கொடை என்றும், எனக்குச் சொல்லித்தர அவர்களிடம் ஏதோ ஒன்று உள்ளது என்றும் நான் புரிந்துகொள்ளும்போது, அங்கு உரையாடல் பிறக்கின்றது" என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியானது.

மேலும், "நாம் அடுத்தவரோடு மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பும் செழுமையான ஒரு மரமாக வளரக்கூடிய ஒரு விதை, அந்த மரத்தில் பலருக்குத் தேவையான உணவும், ஓய்வும் கிடைக்கும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் மாலையில் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

இதற்கிடையே, மெக்சிகோ நாட்டில் கொலை செய்யப்பட்ட இரு அருள் பணியாளர்களின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் உறுதியளிக்கும் திருத்தந்தையின் தந்தியொன்று, மெக்சிகோவின் Papantla மறைமாவட்டத்தின் ஆயர், Trinidad Zapata அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Alejo Nabor Jimenez Juarez, மற்றும் Jose Alfredo Suarez de La Cruz ஆகிய இரு அருள் பணியாளர்கள் தாங்கள் பணியாற்றிய பங்குகளிலிருந்து கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளது தனக்கு ஆழ்ந்த துயரத்தைத் தந்துள்ளது என்று இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்தியில், அருள் பணியாளர்களின் மரணத்தால் துயருறும் அனைவரோடும் தான் ஒன்றியிருப்பதாகவும், இத்தகைய வன்முறைகள் முற்றிலும் கண்டனத்திற்குரியன என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.