2016-09-22 10:25:00

இது இரக்கத்தின் காலம் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்


வயது முதிர்ந்த ஜென் துறவி ஒருவர், தனது பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். அதனால் தன் சீடர்களை அழைத்தார். தனக்குப்பின் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்பதற்கு ஒரு போட்டியையும் அறிவித்தார். போட்டி இதுதான். சீடர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு கவிதை எழுதித் தரவேண்டும், அதில் சிறந்த கவிதை எதுவோ அதை எழுதியவர்தான் ஆசிரமத்தின் புதிய தலைவர். உடனடியாக சீடர்கள் கவிதை எழுத உட்கார்ந்தார்கள். சிறந்த சொற்கள், அற்புதமான கருத்துகள், பிரமாதமான சிந்தனைகளைக் கொட்டி பல கவிதைகளை அவர்கள் எழுதிச் சமர்ப்பித்தார்கள். அந்தத் துறவி எல்லாக் கவிதைகளையும் படித்தார். கடைசியாக அவர் ஒரு சமையல்காரரின் கவிதையைத் தேர்ந்தெடுத்தார். ‘என்னது? இந்தச் சமையல்காரனா எங்களுக்கெல்லாம் குரு?’, இந்த முடிவை எங்களால் ஏற்கமுடியாது!’ என்றனர் சீடர்கள். ‘நான் வைத்த போட்டியில் அவருடைய கவிதைதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்தான் அடுத்த குருநாதர்’ என்று தீர்மானமாகச் சொன்னார் துறவி. இதனால் எரிச்சலடைந்த சீடர்கள், அந்தச் சமையல்காரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட துறவி, அவரை இரகசியமாக அழைத்தார். தன்னுடைய மேலாடை மற்றும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து வாழ்த்தினார். அன்று இரவு, அந்தச் சமையல்காரர், ஆசிரமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். வேறொரு கிராமத்திற்குச் சென்று தங்கிக்கொண்டு, தியானத்திலும், கல்வியிலுமாக நேரத்தைச் செலவிட்டு ஞானம் பெற்றார். பெரிய ஜென் போதகரானார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.