2016-09-22 16:11:00

அமைதியின் வாய்க்கால்களாக வாழ்க – திருத்தந்தையின் வாழ்த்து


செப்.22,2016. "இறைவனின் அன்பால் சூழப்படுவதற்கு நம்மை நாமே எவ்வளவுக்கெவ்வளவு அனுமதிக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நம் வாழ்வு மறுமலர்ச்சியடையும்" என்று, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “இத்துறவு இல்லத்தில் வாழும் அனைவருக்கும், இறைவன் தன் அமைதியைப் பொழிந்து ஆசீர்வதிப்பாராக” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  அசிசி நகர் பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தின் குறிப்பேட்டில் எழுதினார் என்று, அசிசி திருத்தல செய்தித் தொடர்பாளர், அருள்பணி Enzo Fortunato அவர்கள் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 20, கடந்த செவ்வாயன்று அசிசி நகரில் இடம்பெற்ற உலக அமைதி செப நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள சென்றிருந்த திருத்தந்தை, பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில் வாழ்வோரைச் சந்தித்த வேளையில், அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில், தன் வாழ்த்துக்களை, இஸ்பானிய மொழியில், தன் கைப்பட எழுதி வைத்தார்.

பிரான்சிஸ்கன் சகோதரர்கள், எளிமை உணர்வோடும், உடன்பிறந்தோர் உணர்வோடும் வாழ்வதை தொடர்வார்களாக என்றும், முழுமையான அமைதியை உய்த்துணரும் சகோதரர்கள், அவ்வமைதியை அனைவருக்கும் வழங்கும் வாய்க்கால்களாக வாழ்வார்களாக என்றும், திருத்தந்தை தன் வாழ்த்துக்களில் கூறியுள்ளார்.

இந்த வாழ்த்துக்களை, ஒரு சிறிய சகோதரனும், பணியாளருமான தான் வழங்குவதாக திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியின் இறுதியில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.