2016-09-22 16:00:00

அசிசி அமைதி விழாவைக் குறித்து, லூத்தரன் சபைத் தலைவர்


செப்.22,2016. உலக அமைதி வேண்டி, அசிசி நகரில் நிகழ்ந்த பல் சமய வழிபாட்டில், அமைதியை வளர்க்க முயலும் அனைத்து நல்ல உள்ளங்களையும் அடையாளம் காண முடிந்தது என்று, எவஞ்செலிக்கல் லூத்தரன் சபையின் தலைவர், Heiner Bludau அவர்கள் கருத்து தெரிவித்தார்.

"அமைதிக்காகத் தாகம்: உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில், சாந்த் எதிஜியோ (Sant'Egidio) குழுமத்தினர், அசிசி நகரில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், உலக லூத்தரன் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்ட Heiner Bludau அவர்கள், அசிசி நகரில் பல்வேறு சமயங்களிடையே நிலவிய மனம் திறந்த உரையாடல் குறித்து மகிழ்வுடன் பேசினார்.

30 ஆண்டுகளுக்கு முன், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இந்த முயற்சியைத் துவங்கியபோது, இவ்வுலகிற்குத் தேவைப்பட்ட அமைதி, தற்போது இன்னும் பல மடங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதை, அனைத்து மதங்களைச் சேர்ந்த நல் மனம் கொண்டோரும் உணர்ந்துள்ளனர் என்று, லூத்தரன் சபைத் தலைவர் Heiner Bludau அவர்கள், எடுத்துரைத்தார்.

இத்தாலி நாட்டில் வாழ்ந்துவரும் லூத்தரன் சபையினரின் எண்ணிக்கை 7000 என்றும், இவர்களிடையே ஜெர்மன், இத்தாலியம் ஆகிய இரு மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன என்றும், இத்தாலிய லூத்தரன் சபை அறிக்கையொன்று கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.