2016-09-21 16:03:00

மறைக்கல்வியுரை : தந்தையைப்போல் இரக்கமுள்ளவராகச் செயல்பட…


செப்.,21,2016. செப்டமபர் 20ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை, இத்தாலியின் அசிசி நகர் சென்று அங்கு குழுமியிருந்த பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து, உலக அமைதிக்கான செபவழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, உரோம் நகரின், புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளைச் சந்தித்து, மறைக்கல்வி உரையை வழங்கினார். இரவில் பெய்த மழையின் பாதிப்பு தொடர்ந்து நீடித்த்தால், இந்த மறைக்கல்வி உரையை செவிமடுக்க வந்திருந்த நோயாளிகள் அனைவரும், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். பொது மறைக்கல்வி உரைக்கு முன்னர், 6ம் பவுல் மண்டபத்தில் நோயாளிகளைச் சென்று சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சி திரை வழியாக மறைக்கல்வி உரையில் தன்னோடு இணைந்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர்களோடு இணைந்து 'அருள்நிறைந்த மரியே' என்ற செபத்தைச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் எனவும் அவர்களிடம் விண்ணப்பித்து, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தபின், தூய பேதுரு வளாகம் நோக்கிச் சென்றார். தூய பேதுரு வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளாவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்ற நற்செய்தி வார்த்தைகளை மையமாக வைத்து மறைக்கல்வி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தந்தையைப்போல் நாமும் இரக்கமுள்ளவராகச் செயல்படவேண்டும் என இயேசு விண்ணப்பித்த பகுதியை வாசிக்கக் கேட்டோம். மீட்பு வரலாற்றை நாம் உற்றுநோக்கும்போது,  மனித குலத்திற்கான, சோர்வுறாத இறை அன்பினைக் கொண்டதாக முழு வெளிப்பாடும் இருப்பதைக் காண்கிறோம். அந்த வெளிப்பாட்டின் மணிமகுடமாக, இயேசு சிலுவையில் உயிர்விட்டது இருந்தது. இத்தகைய ஓர் உயரிய அன்பை கடவுள் ஒருவரால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆகவே, தந்தையைப்போல் இரக்கமுள்ளவராகச் செயல்படும்படி, கிறிஸ்துவால் மனிதகுலத்திற்கு விடப்படும் அழைப்பு, அதன் அளவைப் பொறுத்ததல்ல. மாறாக, இறை இரக்கத்தின் அடையாளங்களாக, வழிகளாக, சாட்சிகளாக செயல்படுவதற்கான அழைப்பு. ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு காலத்திலும் இரக்கத்தின் அருளடையாளங்களாகச் செயல்படவேண்டும் என்பதே, திருஅவைக்கு தரப்பட்டுள்ள மறைப்பணி.   கிறிஸ்தவர்களாகிய நாம், முதலில் திறந்த உள்ளத்துடன் இறை இரக்கத்தைப் பெற்றவர்களாகவும், அதன் பின்னர், அந்த இரக்கத்தை மற்ற மக்களுடன், குறிப்பாக, துன்புறுவோருடன் பகிர்ந்து கொள்பவர்களாகவும் செயல்படுவதன் வழியாக, அவரின் சாட்சிகளாக விளங்கவேண்டும் என இறைவன் நம்மைக் கேட்கிறார்.  இதன் வழியாக, நம் இரக்கம் மற்றும் பிறரன்புப் பணிகள், கிறிஸ்துவின் முகத்தை உலகுக்குக் காட்டும். நாம், ஒருவர் மற்றவரை மன்னிப்பதில், இறை இரக்கத்தையும், இலவசக் கொடை எனும் இறை அன்பையும் வெளிப்படுத்துவதன் வழியாக, மனந்திரும்புதல் எனும் பாதையில் ஒருவருக்கொருவர் உதவுகிறோம் என நற்செய்தியில் இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார்.  இலவசமாகக் கொடுங்கள் நீங்களும் இலவசமாகப் பெறுவீர்கள் என்கிறார் இயேசு. நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவனால் இலவசமாக வழங்கப்பட்டவையே. நாம் எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். இரக்கத்துடன் கூடிய அன்பே, நம் ஒரே பாதை. ஏனெனில், முடிவற்ற இறை இரக்கத்தை, அதன் வழியாகவே மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும்.

இவ்வாறு இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், , alzheimer எனப்படும், மூளையசதி நோய் தினம் இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.  'என்னை நினைவுகூருங்கள்' என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்பட்ட இந்த 23 வது உலக நாள், மூளையசதி நோயினால் துன்புறும் மக்களுடன் நம் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கவும், அன்புநிறை கண்களுடன் அவர்களை நோக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.