2016-09-21 16:58:00

திருத்தந்தை: அமைதிப் பயணத்திற்கு தடை, அக்கறையற்ற நிலை


செப்.21,2016. நாம் அனைவரும் அமைதியைத் தேடி வந்திருக்கும் திருப்பயணிகள் என்றும், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத்தேயு 5:9) என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகரில் இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அமைதிக்காகச் செபிக்கும் அனைத்துலக நாளின் சிகர நிகழ்வாக, புனித பிரான்சிஸ் பசிலிக்கா வளாகத்தில் இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டில் உரையாற்றியத் திருத்தந்தை, இந்த செப நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருப்போரில் பலர், வெகு தூரம் பயணம் செய்து வந்துள்ளனர் என்பதை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

அமைதி வேண்டி நாம் மேற்கொள்ளும் பயணங்கள், வெறும் உடல் சார்ந்த பயணங்கள் மட்டுமல்ல, மாறாக, நமது உள்ளமும், ஆன்மாவும் அமைதி நோக்கி பயணம் செய்கின்றன என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நம்மிடம் இருக்கும் ஒரு பெரும் தடை, நமது அக்கறையற்ற நிலை என்று கூறினார்.

உலகின் பெரும்பான்மை மக்கள், போரின் கொடுமைகளால் துன்புறும்போது, நாம் அக்கறையற்றவர்களாக வாழ முடியாது என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆயுதங்களைப் பயன்படுத்தி போரிடுவோருக்கு எதிராக, நாம் எவ்வித ஆயுதமும் ஏந்தாமல், நம் செபத்தின் வலிமையை மட்டும் நம்பி இங்கு கூடியிருக்கிறோம் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபம் என்ற இந்த ஆயுதம் அனைத்து மதங்களையும் இங்கு இணைத்துள்ளது என்று கூறினார்.

ஒருவர் மற்றவருக்கெதிராக செபித்த வரலாற்றுத் தவறுகள் நம்மிடையே ஒரு சில வேளைகளில் நிகழ்ந்திருந்தாலும், பல்வேறு மத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவருமே, அமைதி என்ற ஒரே கருத்தை வலியுறுத்தி, இன்று, இங்கு, இணைந்து செபித்திருக்கிறோம் என்று திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

அமைதி என்பது எளிதான, அதேவேளையில் சவாலான சொல் என்று கூறியத் திருத்தந்தை, அந்த சொல்லில், மன்னிப்பு, வரவேற்பு, கூட்டுறவு, உரையாடல், கற்றுக்கொள்ளுதல் என்ற பல அம்சங்கள் அடங்கியுள்ளன என்று தன் உரையில் விளக்கிக் கூறினார்.

சமயத் தலைவர்கள் என்ற முறையில், உரையாடல் பாலங்களை அமைப்பதும், அமைதியைக் கொணர்வதற்கு படைப்பாற்றல் மிக்க, புதிய வழிகளை உருவாக்குவதும் நமக்கு முன் உள்ள பொறுப்பு என்று, திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கூறினார்.

"அமைதி என்பது ஒரு சில அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள கடமை அல்ல, அது, நாம் அனைவரும் இணைந்து உருவாக்கும் ஒரு தொழிற்கூடம்" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் அசிசி நகரில் கூறிய வார்த்தைகளை தன் உரையின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை உருவாக்கும் பொறுப்பை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.