2016-09-20 17:39:00

மெக்சிகோவில் இரு அருள்பணியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை


செப்.20,2016. கடந்த ஞாயிறன்று மெக்சிகோவின் கிழக்குப் பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட இரு அருள்பணியாளர்களின் குண்டு துளைத்த சடலங்கள் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Poza Rica என்ற இடத்தின் கோவிலில் பணியாற்றிய இரு அருள்பணியாளர்களும் ஒரு கோவில் பணியாளரும், ஆயுதம் தாங்கிய மனிதர்களால் ஞாயிறன்று பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட நிலையில், இரு அருள்பணியாளர்களின் உடல்களும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற Teziutian பகுதி ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்பணி Jose Alberto Guerrero அவர்கள், கடத்தப்பட்ட கோவில் பணியாளர் எவ்வித காயமுமின்றி தப்பி வந்துள்ளார் என்றார்.

உலகில் கத்தோலிக்கர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளுள் இரண்டாவது இடத்தை வகிக்கும் மெக்சிகோவில், அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து மெக்சிகோ ஆயர் பேரவை தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

2012ம் ஆண்டிலிருந்து இதுவரை மெக்சிகோ நாட்டில் 14 அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் :  CatholicHerald / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.