2016-09-20 17:00:00

அசிசி நகரில் திருத்தந்தையுடன் அமைதிக்கான செபம்


செப்.20,2016. செப்டம்பர் 20, இச்செவ்வாயன்று அமைதிக்காகச் செபிக்கும் அனைத்துலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, இத்தாலியின் அசிசி நகருக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மதத் தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்து வாழ்த்தியதுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவழிபாட்டிலும் கலந்துகொண்டார்.

1986ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட உலக அமைதி செப நாளின் 30ம் ஆண்டு நிறைவையொட்டி, "அமைதிக்காகத் தாகம்: உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்" என்ற மையக் கருத்துடன் அசிசி நகரில் இடம்பெற்ற செபநாளில் திருத்தந்தை கலந்துகொள்ளச் சென்றார்.

அசிசி நகரை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு, காண்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர், ஜஸ்டின் வெல்பி, அந்தியோக்கியாவின் சீரோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இரண்டாம் எஃப்ரேம், யூத, இஸ்லாம், மற்றும் புத்தமதப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

உரோம் நகரிலிருந்து, செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ 11.30 மணிக்கு, அசிசி நகரை சென்றடைந்தபோது, திருவிழாக் கொண்டாட்டத்தைக் குறிப்பதைப்போல், அனைத்து கோவில் மணிகளும் ஒருசேர ஒலித்தன.

குழுமியிருந்த பல்வேறு மதத் தலைவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என, ஏறத்தாழ 510 பேரை தனித்தனியாகச் சந்தித்துக் கைகுலுக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர், பிரான்சிஸ்கன் துறவு இல்லத்தில், மதத் தலைவர்கள், மற்றும் 25 புலம் பெயர்ந்தோருடன் மதிய உணவருந்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.