2016-09-20 17:20:00

அகதிகள் பிரச்னைக்கு ஒன்றிணைந்து தீர்வு - கர்தினால் பரோலின்


செப்.20,2016. தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் நாடுகளையும் விட்டு மக்கள் புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கான மூலக் காரணங்களைக் கண்டுணர்ந்து, அவற்றை அகற்ற உழைக்க வேண்டியது, உலகத் தலைவர்களின் கடமையாகிறது என்று கூறினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் குறித்த ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இப்பிரச்சனை, மனிதரால் உருவாக்கப்பட்டது, ஏனெனில், போரும் மோதல்களுமே இதற்கான முக்கியக் காரணங்கள் எனவும் கூறினார்.

அண்மைக் காலங்களில் மத அடிப்படையிலான சித்ரவதைகளால், மக்கள் குடிபெயர்வது அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இத்தகைய சித்ரவதைகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களே எனவும் கூறினார்.

மிகவும் ஏழ்மை நிலைகளும், சுற்றுச்சூழல் அழிவும், குடிபெயர்தலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன எனவும் சுட்டிக்காட்டினார், கர்தினால் பரோலின்.

குடிபெயர்தலுடன் தொடர்புடைய தீமைகளாக, மனிதர்கள் விலைபொருட்களாக கடத்திச் செல்லப்படுதல் மற்றும் மனித அடிமைத்தனம் போன்றவற்றையும் சுட்டிக்காட்டிய திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், அரசியல் விருப்பார்வம் மற்றும் உறுதிப்பாட்டின் வழியாக இவற்றை மாற்றியமைக்க முடியும் எனவும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.