2016-09-19 16:34:00

வாரம் ஓர் அலசல் – அன்பே உலகை இயக்கும் சக்தி


செப்.19,2016. அன்பு நேயர்களே, காவிரி தண்ணீர் தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் போதெல்லாம், கர்நாடகாவில், வன்முறைப் போராட்டம் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. இப்பிரச்சனை  குறித்து, புட் சட்னி வீடியோவில் ராஜ் மோகன் அவர்கள், ஆதங்கத்தோடு கூறுவதைக் கேட்போமா.. காவிரி, கர்நாடகாவில் பிறந்தாலும், அது அம்மாநிலத்தைவிட, தமிழகத்தில்தான் அதிகளவில் பாய்கிறது. (தமிழகம் 43,856 ச.கிலோ.மீ.; கர்நாடகம் 34,273 ச.கிலோ.மீ; புதுச்சேரி 160 ச.கிலோ.மீ). மேலும், பெங்களூரில், 13 இலட்சம் லிட்டர் தண்ணீர், தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. நான்காயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்படவிருப்பதற்கு, ஏழு டி.எம்.சி. தண்ணீர் காவேரியிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. தண்ணீரை, தனியார்மயமாக்கிய முன்னணி மாநிலம் கர்நாடகம். 6.1 கோடி கன்னட மக்களுக்கான அணை நீர் சேமிப்பின் கொள்ளளவு 704 டி.எம்.சி. அதேநேரம், 7.4 கோடி தமிழகத்தின் மக்கள் தொகைக்கான அணை நீர் சேமிப்பின் கொள்ளளவு 190 டி.எம்.சி. இதில் ஐம்பது விழுக்காடு காவேரியில் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில், ஏழில் ஒரு பங்கு மட்டுமே காவிரியில் கிடைக்கிறது. இது, ஒரு நண்பர் வாட்ஸப்பில் பகிர்ந்துகொண்ட தகவல். ஒரே நாட்டில், அருகருகே வாழும் உடன்பிறப்புக்களும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் குறைபாடு இது. மனிதநேயம் மரித்துப்போனதன் வெளிப்பாடு. எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்று, மார்தட்டிக்கொள்ளும் பாரத நாட்டில் இப்படியொரு கேவலம். இப்படிப்பட்ட சூழலில் சமுதாயத்தில் அமைதி நிலவுமா? அன்பு தழைக்குமா?

செப்டம்பர் 21, வருகிற புதன், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக அமைதி தினம். உலகம் முழுவதும், அமைதி மற்றும் வன்முறையற்ற ஒரு நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 1981ம் ஆண்டு, ஐ.நா. பொது அவை, உலக அமைதி தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர், 2001ம் ஆண்டில், புதிய ஒரு தீர்மானத்தின் வழியாக, செப்டம்பர் 21ம் தேதியை, உலக அமைதி தினமாகக் கடைப்பிடிக்க ஐ.நா. பொது அவை அறிவித்தது. 2004ம் ஆண்டிலிருந்து, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும், இதே நாளில் இந்த உலக அமைதி நாளை, ஐ.நா.வுடன் சேர்ந்து சிறப்பிக்கின்றது. உறுதியான வளர்ச்சித்திட்ட இலக்குகள், இந்த நம் காலத்தில் அமைதியை எட்டுவதற்கு மிக இன்றியமையாதவை என்ற தலைப்பில், 2016ம் ஆண்டில், இந்த உலக அமைதி தினத்தை ஐ.நா. சிறப்பிக்கின்றது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு, உலகினர் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்று ஐ.நா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இக்காலத்தில், மத்தியக் கிழக்கில், குறிப்பாக, சிரியா, ஈராக்கில் நடப்பது என்ன, ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிரியாவில், பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து தொங்கவிடும் கொடூரக் காணொளியை, கடந்த வாரத்தில், பக்ரீத் பெருநாளன்று வெளியிட்டுள்ளனர். 12 நிமிடங்கள் ஓடும் இக்காட்சிகளில், பிணைக் கைதிகளின் கழுத்தை ஈவு இரக்கமின்றி அவர்கள் அறுக்கின்றனர். இரத்தம் பீறிட்ட நிலையில், கைதிகள் மடிந்து சாய்கின்றனர். அத்துடன் நிற்காமல், இறைச்சிக் கடையில் ஆடு, மாடுகளைத் தொங்கவிடுவது போன்று, கொலை செய்யப்பட்டவர்களையும் தொங்கவிடுகின்றனர். இவ்வாறு, அதைப் பார்த்த ஊடகம் ஒன்று கூறியுள்ளது. மேலும், வட கொரியா மேலும் ஒரு அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது என்று, தென் கொரியா, செப்டம்பர் 13ம் தேதி ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. கடந்த சனவரியில், ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது.

இரும்புப் பெண், நியாயமான ஒருவர் என அழைக்கப்படும், இரோம் சானு ஷர்மிளா (Irom Chanu Sharmila) அவர்கள், ஒரு குடியுரிமை ஆர்வலர், அரசியல் ஆர்வலர் மற்றும் கவிஞர். வட கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் மலோம் நகரில், 2000மாம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, ஆயுதப்படைகளால், பத்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, மணிப்பூரில் அமலில் இருக்கும், ஆயுதப்படைகளுக்கு, அளவுகடந்த அதிகாரங்களை வழங்குகின்ற ஒரு கொடூரமான சட்டத்தை எதிர்த்து, அதே நவம்பர் 5ம் தேதி ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தனது 28வது வயதில் இப்போராட்டத்தைத் தொடங்கிய இவர், 500க்கும் மேற்பட்ட வாரங்களாக உணவு, தண்ணீர் என எதையும் ஏற்க மறுத்தார். ஏறத்தாழ 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதை முடித்துக் கொண்டார். இப்போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில், ஷர்மிளாவைக் கைது செய்த காவல்துறை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, அவரை நீதிமன்றக் காவலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில், அவரை அனுமதித்த காவல்துறையினர், அன்று முதல், மூக்குத்துவாரங்களின் வழியாக குழாய்களைச் செலுத்தி மருத்துவர்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக, உணவையும், மருந்துகளையும் செலுத்திக் கொண்டிருந்தனர். இந்தப் போராட்டம் பற்றி பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த இரோம் ஷர்மிளா அவர்கள், அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி. அன்பின் வழி அரசியலை அணுகி, ஒரு பெரும், வல்லரசை வெளியேற்றிய மகாத்மாவின் வழித்தோன்றல்கள் நாம். அந்த வழியை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது என்று, இந்தியர்களுக்குச் சொல்ல விரும்புவதாகக் கூறியிருக்கிறார். 

அன்பர்களே, அன்பின் வழியேதான் உலகில் அமைதி கிடைக்கும். அன்புதான் இந்த உலகை இயக்கும் சக்தி, இந்த உலகை வெல்லும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடம் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் கலக்கமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில், அன்புதான் ஒரே ஆறுதல். சிலரிடம் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டால், மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணமும் அன்புதான். அன்பாக இருப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் வழியாக, நமக்கு எப்போதும் மகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. அன்பைப் பற்றி பல கேள்விகள் உள்ளன. மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்த ஒரு செயலும் மனமகிழ்வைத் தரும். அன்பைச் சிலருக்கு காட்டத் தெரிவதில்லை. சிலருக்கு அது காட்டப்படுவது தெரிவதில்லை. அது காட்டப்படுவது பலருக்கு புரிவதே இல்லை என்கிறார்கள்.

காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பேசுகிறோம். சிரிக்கிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உள்ளன்போடு சிரித்துப் பேசுகிறோம்? வேறு வழியில்லை, சிரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சிரிக்கிறோமா அல்லது உண்மையான அன்போடு பேசிச் சிரிக்கிறோமா. வலைத்தளத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார் - பொய்யாக சிரித்து, போலியாகப் புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். உதடுகளால் சிரிப்பதை விடுங்கள் என்று. 

தமிழகத்தின் ராசிபுரம் செவிலியர் விஜயலட்சுமி அவர்கள், பல ஆண்டுகள் தான் பணியாற்றிய மக்கள் மத்தியிலே மதிக்கப்படும் பாட்டியாக வலம் வருகிறார். 68 வயது நிரம்பிய விஜயலட்சுமி சொல்கிறார் - பக்கத்து கிராமங்களிலும் சிக்கலான பிரசவங்களுக்கு எப்போது அழைத்தாலும் சென்று உதவினேன். நான் பிரசவம் பார்த்த குழந்தைகளும் பெண்களும், என்னை பார்த்த இடத்திலெல்லாம், ‘பாட்டி’என, அன்போடு அழைத்து விசாரிக்கின்றனர். இதைவிட பெரிய விருது என்ன வேண்டும்? அன்பு மட்டும்தான் அவர்களுக்கு என்னால் அளிக்க முடிந்த முதல் மருந்து. அந்த அன்பு இன்றளவும், அவர்களிடம் என்னை, ஓர் உறவாகவே இணைத்து வைத்துள்ளது என்று. 

மூன்று வயதில் தாயை இழந்து, உறவுக்காரர்கள் வீட்டிலே வளர்ந்த விஜயலட்சுமி அவர்கள், சிறு வயதிலே அன்பிற்காக ஏங்கியவர். திருமணமாகி, அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை. எப்படியோ இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு, வேலைக்குச் சென்ற வேளையில், விஜயலட்சுமியின் கணவரும் இறந்துவிட குடும்பத்தின் மொத்த பாரமும் அவரது தோள்களில் விழுந்தது. இத்தனை வலிகளோடு, குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, வேலையும் பார்க்கத் தொடங்கிய இவர், கர்ப்பிணி கிராமத்துப் பெண்கள், உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவியிருக்கிறார். மேலும், குடும்பங்களில், பல விதங்களில், நெருக்கடிகளைச் சந்தித்த  இப்பெண்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார், தொடர்ந்தும் அவ்வாறு இருந்து வருகிறார்.

அன்பு நேயர்களே, கௌதம புத்தரும், மற்ற துறவியரும் மாற்ற இயலாத, பேரரசர் அசோகரின் போரிடும் வெறியை, அந்த வயதான படைவீரரின் அன்புச்செயல்தான், மாற்றியது. ஆம். மனதில், தன்னலமில்லா அன்பிருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எந்தக் கல்மனதையும் அது மாற்றிவிடும். அன்பிருந்தால் உலகில் யாரும் அனாதையில்லை. நல்லதையே எண்ணி வாழ்ந்தால், வேதனை வீழ்ந்துவிடும். வெற்றி தேடி வரும். எல்லா இடமும், அமைதி நிலவும் சோலையாக மாறும். ஆம். அன்புதான் உலகத்தை இயக்கும் சக்தி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.