2016-09-19 17:17:00

வத்திக்கான் காவல்துறையினருக்கு திருத்தந்தையின் நன்றி


செப்.19,2016. வத்திக்கான் நாட்டின் பாதுகாப்பிற்கென உழைத்துவரும் காவல்துறையினர், கடந்த 200 ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நன்றியை வெளியிட்டார்.

செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில், வத்திக்கான் காவல் துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் திருப்பலி நிகழ்த்தியத் திருத்தந்தை, ஞாயிறு திருப்பலிக்கென வழங்கப்பட்ட இறைவாக்கினர் ஆமோஸ் வாசகத்தை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

மற்றவர்களை வதைப்போர், நேர்மையற்றோர், நம்பிக்கைக்குரியோர் என்ற மூன்று வகை மனிதர்களை, இறைவாக்கினர் ஆமோஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

நேர்மையற்றோர் தவறுகள் செய்யும்போதும், தாங்கள் சரியாக நடப்பதாகவே நம்புவது, மிகத் தவறான போக்கு என்று, திருத்தந்தை எச்சரிக்கை விடுத்தார்.

வத்திக்கான் பாதுகாப்பிற்கென 200 ஆண்டுகளாக உழைத்துவரும் காவல்துறையினரின் அயரா உழைப்பை, வத்திக்கானில் வாழும் அனைவரும் உணர்ந்து போற்றுவதாகக் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் மனம் நிறைந்த நன்றியையும் எடுத்துரைத்தார்.

1816ம் ஆண்டு, திருத்தந்தை, 7ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட Gendarmeria என்றழைக்கப்படும் காவல்துறையினர், வத்திக்கானிலும், வத்திக்கானுக்குச் சொந்தமான இடங்களிலும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.