2016-09-19 17:00:00

திருத்தந்தை - கிறிஸ்தவ முன்மதியோடு செயல்படவேண்டும்


செப்.19,2016. இலஞ்ச ஊழல், ஏமாற்றுதல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற உலகப்போக்குகள், உண்மையான கிறிஸ்தவ வாழ்வு முறைக்கு எதிரானவை என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நற்செய்தியில் தரப்பட்டுள்ள, 'முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்' என்ற உவமை குறித்து, மூவேளை செப உரையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலகாயுத முன் மதியைக் காணும் நாம், கிறிஸ்தவ முன்மதியோடு செயல்படுவது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சாத்தானை மகிழ்ச்சிப்படுத்தும் இவ்வுலகின் மதிப்பீடுகளையும், போக்குகளையும் விட்டுவிலகி, நற்செய்தியின் மதிப்பீடுகளில் வாழ நாம் முன்வரவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தத் திருத்தந்தை, நற்செய்தியின் மதிப்பீடுகள், மிகுந்த சவால்கள் நிறைந்தவை, பொறுப்புணர்வு போன்ற உயர்ந்த பண்புகளை உள்ளடக்கிய கிறிஸ்தவ நுண்மதி அது என்று எடுத்துரைத்தார்.

நேர்மைக்கும், நேர்மையற்ற நிலைக்கும், சுயநலத்திற்கும், பிறர் நலத்திற்கும், தீமைக்கும் நன்மைக்கும் என்ற இரு முரண்பட்ட நிலைகளுக்கு இடையே நாம் தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை உணர்த்தவே, இயேசு, 'எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை புரிய இயலாது' என்பதை, இவ்வுவமையின் இறுதியில் எடுத்துரைத்தார் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.