2016-09-19 16:45:00

ஒளியின் மக்களாகச் செயல்படுவோம் - திருத்தந்தை


செப்.19,2016. தாங்கள் பெற்றிருக்கும் விசுவாச ஒளி, மற்றவர் முன் ஒளிரும்படியாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள விளக்கை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்தார்.

திருமுழுக்கின்போது பெற்றுக்கொண்ட விசுவாசம் என்ற கொடையை போற்றி பாதுகாப்பது மட்டுமல்ல, அவ்வொளி, தீயோனின் சூழ்ச்சிகளால் அணைக்கப்படாமல் காத்து, மற்றவர் முன் அதனை ஒளிரச் செய்யவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நல்ல செயல்களை நாளைக்குச் செய்வோம் என்று தள்ளிப்போடுவது, நம் விசுவாச ஒளியை மறைத்து வைப்பதற்கு ஈடாகும் என்பதோடு, அது அநீதியுமாகும் என்று கூறியத் திருத்தந்தை, அயலவருக்கு எதிராக தீமை செய்வதை நாம் ஒவ்வொருவரும் தவிர்க்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

பிறர் மீது பொறாமைப்படுவதும், நம் விசுவாச ஒளியை மறைக்கிறது என்று கூறியத் திருத்தந்தை, வீண் வாக்குவாதங்களில் ஈடுபட்டு, அதனால் இன்பமடைவதையும் தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.

இருளின் மக்களாக இல்லாமல், ஒளியின் மக்களாகச் செயல்படுவோம், ஏனெனில் இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒளி, தாழ்ச்சி, நட்புணர்வு, விசுவாசம், நம்பிக்கை, பொறுமை மற்றும் நன்மைத்தனம் அனைத்தின் ஒளி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.