2016-09-17 16:56:00

மருத்துவமனையில் திருத்தந்தையின் இரக்கத்தின் யூபிலி சந்திப்பு


செப்.17,2016. நடைபெறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ஒவ்வொரு ,மாதமும் ஒரு வெள்ளிக்கிழமையன்று பிறரன்புச் சேவையை நேரடியாகச் சென்று செய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வார வெள்ளியன்று, உரோம் நகரின் இரு மருத்துவமனைகளைச் சென்று, நோயுற்றோரைச் சந்தித்தார்.

வெள்ளியன்று மாலை, முதலில் உரோம் நகரின் புனித ஜான் மருத்துவமனைக்குச் சென்ற திருத்தந்தை, அங்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 12 பச்சிளம் குழந்தைகளைச் சென்று பார்வையிட்டு, அக்குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

சிகிச்சைப் பெற்றுவரும் அக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மருத்துவமனை விதிமுறைகளுக்கு இணங்க, மருத்துவ பாதுகாப்பு உடையணிந்தே அந்த சிகிச்சைப் பிரிவுக்குள் சென்றார், திருத்தந்தை.

குழந்தைகள் அருகே சென்று, அவர்களை அசீர்வதித்ததுடன், குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார் அவர்.

பின், அங்கிருந்து, ஜெமெல்லி திரு இருதய கத்தோலிக்க மருத்துவமனையின் ஓர் அங்கமாக விளங்கும் ‘நம்பிக்கை இல்லம்’ சென்ற திருத்தந்தை, நோயின் இறுதிக்கட்டத்தில், மரணத்தை நோக்கி காத்திருக்கும் 30 நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தன் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளில் குழந்தைகள், நோயாளிகள், முதியோர் ஆகியோருக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், இவ்வாரம், ஒரே நாளில், இரு மருத்துவமனைகளுக்குச் சென்று, குழந்தைகளையும், தீரா நோயால் துன்புறுவோரையும் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.