2016-09-17 16:45:00

திருத்தந்தை - பாலங்களைக் கட்டுவது, தூதர்களின் முக்கியப் பணி


செப்.17,2016. ஒவ்வொரு நாட்டிலும் தன் பிரதிநிதியாக, அந்நாட்டு மக்களுக்காகவும், திருஅவைக்காகவும் தாராள மனதுடன் பணியாற்றும் திருப்பீடத் தூதர்களுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழன் முதல், சனிக்கிழமை முடிய, உரோம் நகரில் நடைபெற்ற பாப்பிறை பிரதிநிதிகள் யூபிலியில் கலந்துகொள்ள வந்திருந்த திருப்பீடத் தூதர்களை, இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்விடத்தில் பணியாற்றினாலும், திருப்பீடத் தூதர்கள், தியாக உணர்வோடும், தாழ்ச்சியோடும் பணியாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருப்பீடத் தூதரின் பணி என்பது, தலைமைத் திருஅவைக்கும், தலத்திருஅவைக்கும் ஒரு பாலமாகச் செயலாற்றும் பணி மட்டுமல்ல, தல ஆயர்களையும், அருள் பணியாளர்களையும், விசுவாசிகளையும் இணைக்கும் பணியும்கூட என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையோடு இணைந்து, ஒரு மேய்ப்பரைப் போல், திருப்பீடத் தூதர்கள் செயலாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையாக இருக்கும் விசுவாசிகளோடு இணைந்து நடக்கவேண்டிய அவர்களின் கடமையைச் சுட்டிக்காட்டினார்.

பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் இவ்வுலகில், அமைதியின் தூதர்களாக, வாசல்களைத் திறப்பதையும், பாலங்களைக் கட்டுவதையும், ஒன்றிப்பை ஊக்குவிப்பதையும் கடமையாகக் கொண்டு, செபத்தின் மனிதர்களாக வாழ்வோம் என்று, திருப்பீடத் தூதர்களுக்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.