2016-09-17 16:58:00

சிரியா போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து திருஅவை கவலை


செப்.,17,2016. சிரியாவில் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மூன்று நாட்கள் மோதல்கள் இல்லாதிருந்த போதிலும், ஆங்காங்கே இடம்பெறும் தாக்குதல்கள் அச்சத்தைத் தருவதாக உள்ளன என, தன் கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு அருள்பணி Alsabagh Ibrahim.

அலெப்போ நகருக்கு மேற்கேயுள்ள Aziziehன் ஆயர் இல்லத்திற்கு அருகே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட அருள்பணி இப்ராகிம் அவர்கள், ஆயர் இல்லத்தையும் அன்னைமரி பேராலயத்தையும் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆயரும் அவருடைய உதவியாளரும் அவ்வில்லத்தில் இல்லாதபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை என்றார், அருள்பணி இப்ராகிம்.

இஸ்லாமியர்களின் தியாகத் திருவிழாவையொட்டி உருவாக்கப்பட்ட போர் நிறுத்தம், பல இடங்களில் சரியாகக் கடைப்பிடிக்கப்படாததால்,  வருங்கால அமைதி குறித்த அச்சம் மக்களில் தலைதூக்கியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.