2016-09-17 16:50:00

இயேசு சபை முன்னாள் மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை


செப்.17,2016. இரண்டாம் உலகப் போருக்குப் பின், மனிதகுலத்தின் மிகப்பெரும் நெருக்கடியாக மாறியுள்ள குடிபெயர்வு, மற்றும் புலம்பெயர்வு ஆகிய பிரச்சனைகளில், இயேசு சபை கல்விக்கூடங்களின் முன்னாள் மாணவர்கள் காட்டிவரும் அக்கறை குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இயேசு சபை கல்வி நிலையங்களின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு, புலம்பெயர்வோர் பிரச்சனையை மையப்படுத்தி, உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டோரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள், தங்கள் சொந்த இடங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்படுவது குறித்த அடிப்படைக் காரணங்களை ஆராய்வதுடன், தங்கள் சொந்த நாடுகளில் துவங்கி, இப்பிரச்சனையை நீக்குவதில் முன்னாள் மாணவர்கள் கடமையுணர்வுடன் ஈடுபடவேண்டும் என்று அவர்களிடம் அழைப்பு விடுத்தார்.

இன்று உலகம் முழுவதும் பலவந்தமாக குடிபெயர வைக்கப்பட்டுள்ள 6 கோடியே, 50 இலட்சம் மக்கள் என்ற எண்ணிக்கை, இத்தாலியின் மக்கள் தொகையைவிட அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, 35 ஆண்டுகளுக்கு முன், இயேசு சபையின் உலகத் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தென் வியட்நாம் அகதிகளின் துயரங்களால் தூண்டப்பட்டு, உருவாக்கிய JRS அமைப்பின் பணி நோக்கத்தை, முன்னாள் மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிரியா, தென் சூடான் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோர் நிலை குறித்து கவலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளில் 50 விழுக்காட்டினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வசதிகள் உள்ளன என்பதையும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.