2016-09-16 16:45:00

நினிவே பள்ளத்தாக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை


செப்.16,2016. ஈராக்கின் நினிவே பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து நகரங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன், அப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி கண்ணி வெடிகளை அகற்றுவது முதல் கடமை என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பம் விடுத்துள்ளார்.

புனிதப் போர் நிகழ்த்துவதாகக் கூறும் அடிப்படைவாதிகள், ஒரு நகரில் தோல்வியடைந்து வெளியேறும் நிலையில், அந்நகரில் கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுச் செல்வதால், மரணங்களை தொடர்ந்து விதைத்துவிட்டுச் செல்கின்றனர் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஆசிய செய்திக்கும், பீதேஸ் செய்திக்கும் அனுப்பிய ஒரு மடலில் குறிப்பிட்டுள்ளார்.

தரைமட்டமாக்கப்பட்டுள்ள மோசூல் மற்றும் ஏனைய நகரங்களில், மருத்துவ மனைகளையும், பள்ளிகளையும் கட்டுவது அவசியம் என்றாலும், அதற்கு முன்னதாக, அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றி, அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம் என்று முதுபெரும் தந்தையின் மடல் வலியுறுத்துகிறது.

நினிவே பள்ளத்தாக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட 1,20,000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், மீண்டும் அங்கு குடியேற ஆவல் கொண்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அப்பகுதியின் பாதுகாப்பு உறுதியான பிறகே, மக்கள் அங்கு நுழைவது நல்லது என்று கூறியுள்ளார்.

மீண்டும் வாழவரும் குழந்தைகளை மனதில் கொண்டு, கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலத்தில் அவர்கள் காலடி பதிக்கக் கூடாது என்ற கருத்துடன், தானும் பல்வேறு நாடுகளின் உதவியை நாடியிருப்பதாக முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.