2016-09-16 16:23:00

கர்தினால் பரோலின் - பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி மறையுரை


செப்.16,2016. 'சிலுவையின் அடியில் நிற்பது, பாப்பிறை பிரதிநிதிகளின் முதன்மையானப் பணி' என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வியாழன் ஆற்றிய ஒரு மறையுரையில் கூறினார்.

நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக, செப்டம்பர் 15, இவ்வியாழன் முதல், 17, இச்சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி கொண்டாட்டத்தின் துவக்கத் திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மன்னன் நெப்போலியனால் திருஅவைக்கு ஏற்பட்ட துன்பங்களின் நினைவாக, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்கள், துயருறும் அன்னை மரியா திருநாளை திருஅவை கொண்டாட்டங்களில் ஒன்றாக இணைத்தார் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், இன்றும், திருஅவை பல்வேறு கல்வாரிகளைச் சந்தித்து வருவதால், இந்த விழா பொருள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்கத் திருஅவை, மறைசாட்சிகளின் திருஅவையாக இருப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்தி வருகிறார் என்பதை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பிரான்ஸ் நாட்டில் கொலையுண்ட அருள்பணி Jacques Hamel அவர்களுக்காக செப்டம்பர் 14ம் தேதி திருத்தந்தை நிறைவேற்றியத் திருப்பலியைக் குறித்துப் பேசினார்.

இறைமகன் இயேசு மரணத்தை நெருங்கியபோது, உலகம் இருளால் சூழப்பட்டது என்றாலும், அந்த இருளின் நடுவில், சிலுவையடியில் மரியன்னை நின்று கொண்டிருந்தது, நம்பிக்கை ஒளியைத் தரும் ஒரு வாக்கியமாக விவிலியத்தில் விளங்குகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இன்று நம்மீது சுமத்தப்படும் பல சிலுவைகளின் அடியில் நிற்பது, பாப்பிறை பிரதிநிதிகளுக்கு விடுக்கப்படும் ஒரு சிறப்பான அழைப்பு என்பதை திருப்பீடச் செயலர் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.