2016-09-16 16:55:00

அன்னை தெரேசாவின் பாரம்பரியத்தைத் தொடரும் பல்கலைக் கழகங்கள்


செப்.16,2016. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இயங்கிவரும் மூன்று பல்கலைக் கழகங்கள், அன்னை தெரேசா அவர்கள் துவங்கிய சமூகப்பணி பாரம்பரியத்தைத் தொடர்வதற்கு முடிவு செய்துள்ளன என்று, அப்பகுதியில் தொடர்பு சாதனத் துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணி சி.எம்.பால் அவர்கள், பீதேஸ் (Fides) செய்தியிடம் கூறினார்.

அன்னை தெரேசா அவர்கள் இவ்வுலகிலிருந்து மறைந்து ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் விட்டுச்சென்ற உன்னத எண்ணங்கள், இளையோரை மட்டுமல்லாமல், கல்வியாளர்களையும் கவர்ந்து  வருவது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று அருள்பணி பால் அவர்கள் கூறினார்.

அன்னையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சமுதாய அக்கறை கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்க பல்வேறு அம்சங்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தி வருகிறோம் என்று, குவஹாத்தி பல்கலைக் கழக துணை வேந்தர், Mridul Hazarika அவர்கள் கூறியுள்ளார்.

வடகிழக்கு இந்தியாவின், குவஹாத்தி பல்கலைக் கழகம், திப்ருகாரே (Dibrugarhe) பல்கலைக் கழகம், மற்றும், காட்டன் கல்லூரி மாநில பல்கலைக் கழகம் ஆகிய மூன்று கல்வி நிலையங்கள், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.