2016-09-14 17:25:00

அக்கரையில் தெரியும் வாழ்வு ஆபத்தானது - நைஜீரியக் கர்தினால்


செப்.14,2016. மனித வர்த்தகத்தினால் நைஜீரியா நாட்டிலிருந்து வெளியேறும் இளையோரைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், நைஜீரிய அரசு, நாட்டிற்குள் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று அபுஜா பேராயர், கர்தினால் ஜான் ஒனேயேக்கன் (John Oneiyekan) அவர்கள் கூறினார்.

பயணிகளின் மேய்ப்புப்பணி திருப்பீட அவையும், அகில உலக காரித்தாஸ் அமைப்பும் இணைந்து, மனித வர்த்தகத்தை மையப்படுத்தி, நைஜீரியத் தலைநகர், அபுஜாவில் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரை வழங்கிய கர்தினால் ஒனேயேக்கன் அவர்கள், இவ்வாறு கூறினார் என்று பிதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

உள்நாட்டில் வேலை தேடி களைத்துப்போகும் இளையோரை, வெளிநாட்டு வாழ்க்கையும், வேலை வாய்ப்புக்களும் ஈர்க்கின்றன என்று கூறிய கர்தினால் ஒனேயேக்கன் அவர்கள், இக்கரையிலிருந்து பார்க்கும்போது அக்கரையில் தெரியும் வாழ்வு அழகாகவே தெரிகிறது, ஆனால் அது ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்தார்.

குளிர் காலத்தில் நைஜீரியாவில் நிலவும் குளிரில், பாலங்களுக்கு அடியில் வெளியில் படுத்துறங்க முடியும், ஆனால், மிகக் கொடுமையான குளிர் காலம் உள்ள அயல் நாடுகளில், பாலங்களுக்கு அடியில் தூங்குவது, மரணத்தில் முடியும் என்று, அக்கரை வாழ்வைக் குறித்து பேசும்போது, கர்தினால் ஒனேயேக்கன் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.