2016-09-13 16:18:00

திருத்தந்தை : சந்திப்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம்


செப்.13,2016. புறக்கணிப்பு கலாச்சாரத்தைப் புறந்தள்ளி, சந்திப்புக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில், வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

இறைவன் தம் மக்களோடு நடத்தும் சந்திப்பு பற்றி, இத்திருப்பலி மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, நம்மிடையே, ஏன் நம் குடும்பங்களிலும் நிலவுகின்ற, பிறருக்குச் செவிமடுக்காமல் இருக்கும், தீய பழக்கத்திற்கு எதிராக எச்சரித்தார்.

சமுதாயத்தில், மக்கள் ஒருவரையொருவர் சந்திக்காமலே கடந்து செல்கின்றனர் என்றும், ஒவ்வொருவரும் தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டு செல்கின்றனர், அவர்கள் பார்க்கின்றார்கள், ஆனால் நோக்குவதில்லை, உணர்கின்றார்கள், ஆனால் அவர்கள் கேட்பதில்லை என்றும் கவலையோடு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறந்த தனது ஒரே மகனின் சவ ஊர்வலத்துடன் வந்துகொண்டிருந்த நயீன் ஊர் கைம்பெண்ணை, அவ்வூர் வாயிலில் இயேசு சந்தித்தது பற்றிக் கூறும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை (லூக்.7:11-17) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இச்சந்திப்பில், இயேசு அப்பெண்ணின்மீது மிகவும் பரிவுகொண்டார் என, நற்செய்தி சொல்கிறது, தெருவில் நாம் செல்லும்போது, இதேபோல் நடந்துகொள்வதில்லை என்றும் கூறினார்.

தெருவில் சோகமான ஒன்றைப் பார்க்கும்போது, இது மிக மோசம் என்று சொல்லி, கடந்து செல்கின்றோம், ஆனால் இயேசு இந்த உணர்வையும் கடந்து, அந்த மனிதர்மீது பரிவுகொண்டு, அவரைச் சந்தித்து, புதுமை செய்கிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

இயேசுவோடு இடம்பெற்ற இச்சந்திப்பில், புறக்கணிப்பு புறந்தள்ளப்படுகிறது, மனித மாண்பு நிலைநிறுத்தப்படுகிறது எனவும், நயீன் கைம்பெண்ணின் இறந்த மகனை இயேசு உயிர்ப்பித்த இப்புதுமையைக் கண்ட மக்கள், கடவுளைப் போற்றினர், ஏனென்றால், இயேசு, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சந்திப்பை ஏற்படுத்தினார் எனவும் கூறினார் திருத்தந்தை.

நம் குடும்பங்களில், உணவருந்தும் முக்கியமான நேரங்களில், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு அல்லது கைபேசியில் செய்தியை எழுதிக்கொண்டு இருக்கின்றனர், இச்சந்திப்பில் ஒவ்வொருவரும் பாராமுகமாய் இருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, குடும்பங்களில், இந்த இடம், முக்கியமான சந்திப்பு நிகழும் இடமாகும் என்று கூறினார்.

ஒருவரைச் சந்திக்கும்போது, இது வெட்கத்துக்குரியது, மோசம் என்று வெறுமனே சொல்லாமல், இயேசு செய்தது போல, அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு, ஆறுதலளிக்கும் வார்த்தைகளைச் சொல்லுமாறு, மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.