2016-09-12 15:42:00

வாரம் ஓர் அலசல் – சாதிக்காக அல்ல, சாதிக்கப் பிறந்தவர்கள்


செப்.12.29,2016. அன்பு நெஞ்சங்களே, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள், கடந்த சனிக்கிழமை, ரியோ மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். நல்ல உடல்நிலையில் உள்ளவர்க்கு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம்கூட பெறாத நிலையில், 'பாராலிம்பிக்' எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், மாரியப்பன் தங்கவேலு, தங்கப் பதக்கம் வென்று, அபார சாதனை படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர்களுக்கு இந்தியாவிலிருந்து பரிசு மழைகளும், வாழ்த்து மாலைகளும் குவிந்தன. நம் வாழ்த்துக்களையும் இந்த வீரர்களுக்குத் தெரிவிக்கிறோம். 

22 வயது நிரம்பிய மாரியப்பன் தங்கவேலு அவர்கள், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த பெரிய வடக்கம்பட்டியை சேர்ந்தவர். இவர், மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, பேருந்து விபத்தில் சிக்கியதில், வலது கால் முழங்காலுக்கு கீழ் செயலிழந்தது. தற்போது, சேலம் ஏ.வி.எஸ்., கல்லுாரியில், பி.பி.ஏ. படித்து வருகிறார். இவரது தாய் காய்கறி விற்பவர். மாரியப்பன், 2012ல் இலண்டனில் நடந்த, 'பாராலிம்பிக்' போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. தொடர்ந்து, பெங்களூரில் நடந்த தேசிய போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி, சாதனை படைத்தார். மேலும், தனது திறமையை வளர்த்துக் கொள்ள, பெங்களூரு பயிற்சியாளர் சத்திய நாராயணனிடம் சேர்ந்தார்; அவரது சிறப்புப் பயிற்சி காரணமாக, கடந்த மார்ச்சில், துனிஷியாவில் நடந்த, Grand Prix போட்டியில், 1.78 மீட்டர் உயரம் தாண்டி, 'பாராலிம்பிக்' போட்டிக்குத் தகுதி பெற்றார். இப்போது ரியோவில் தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார். இவரைப் பாராட்டி, இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நீங்கள், 1.89 மீட்டர் உயரம் தாண்டி, வரலாற்றில் புதிய உயரத்தை எட்டியுள்ளீர்கள். பல தடைகளையும், இடையூறுகளையும் தாண்டி, தாங்கள் படைத்துள்ள சாதனை, மேலும் பல குழந்தைகளையும், இளைஞர்களையும், புதிய சாதனை படைக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அன்பு இதயங்களே, அந்த விவசாயி, அந்த பஞ்சவர்ணக் கிளி அமர்ந்திருந்த கிளையை வெட்டிவிட்டு அது பறக்க உதவியதுபோல, இறைவனும், நம்மிடமுள்ள ஆற்றலை நாம் உணர்வதற்காகவே, சிலசமயம், நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டி விடுகிறார் என்கிறார் ஒரு வலைத்தள நண்பர். மாரியப்பன் போன்ற சிலர், இதை உணர்ந்து தங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த முயற்சியும் அவர்களைக் கைவிடுவதில்லை. கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்த ஏஞ்சலின் ஷெரின் அவர்கள் வாழ்வும், இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இவர், உலகில் மிக அபூர்வமாக, வெகு சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய CAH (Congenital adrenal hyperplasia (CAH) CAH effects the adrenal glands located at the top of each kidney) எனும், நாளம் தொடர்பான நோயால் தாக்கப்பட்டிருப்பவர். பதினொன்றாம் வகுப்பு படித்துவரும், பதினைந்து வயது சிறுமி இவர். தான் வாழும் நாள் பற்றிய விவரம் தெரிந்தும், ஏஞ்சலின் கலங்கவில்லை. வாழும் வரை தானும் மகிழ்வாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்து, அதற்காக அவர் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி என்ன? நடனம்!

நாட்டிய தேவதை என்று சொல்லும் விதத்தில் பரதநாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என்று, அனைத்துவகை நடனங்களையும் ஆடுவதில் வல்லவர் ஏஞ்சலின். அதோடு படிப்பிலும் படுசுட்டி. இவரின் பெற்றோருக்கு, 13 ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல், தவமிருந்து பெற்ற பிள்ளை ஏஞ்சலின். குழந்தை பிறந்தபோது மிகவும் மகிழ்வாக இருந்த பெற்றோர், இவரைத் தாக்கியுள்ள அபூர்வ நோய் பற்றி மருத்துவர்கள் சொன்னபோது அதிர்ந்து போனார்கள்.  மாத்திரைகள் மரணத்தை கொஞ்ச நாளைக்குத் தள்ளிப்போடுமே தவிர, இந்த நோய்க்கு தீர்வைத் தராது என்று, மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஒரு பக்கம் இவரது நடனத்திறமை அதிகரித்துக்கொண்டே இருப்பதுபோல, நோயின் தீவிரமும் கூடிக்கொண்டே போகிறது. அடிக்கடி இவர் சுருண்டு விழுந்துவிடுகிறாராம். ஒவ்வொரு முறை சுருண்டு விழும்போதும் இது மயக்கமா? மரணமா? என பெற்றோர் துடிதுடித்து போகிறார்களாம். மாற்றுத்திறனாளிகளுக்கு, அறக்கட்டளை அமைத்து, பராமரித்து வரும், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களைச் சந்திக்க வேண்டும், முடிந்தால், அவருடன் இணைந்து நடனமாடவேண்டும் என்ற ஏஞ்சலின் அவர்களின் ஒரே ஒரு ஆசையும் நிறைவேறியுள்ளதாம். ஏஞ்சலின் அவர்களின் ஆசைக்கனவை நிறைவேற்றி, லாரன்ஸ் அவர்கள் இயக்கும் ஒரு படத்தில், நடனம் ஆட வாய்ப்பளிக்கவும் அவர் உறுதியளித்துள்ளதாக, கடந்த வாரத்தில், தினமலர் இ-தினத்தாளில் ஒரு செய்தி இருந்தது. நீ வாழப்பிறந்தவள், நடனத்தால் ஆளப்பிறந்தவள் என்று, லாரன்ஸ் அவர்கள் ஏஞ்சலினை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

அன்பு நேயர்களே, எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். இன்று, எல்லாரும், குறிப்பாக, வளரும் இளையோர் உயர உயரப் பறப்பதற்குப் படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல நேரங்களில், இதை உணராமல், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, பழக்கப்பட்ட, எளிதான வேலைகளில் மட்டுமே, இதுதான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகின்றனர். ஆதலால்தான் பலருக்கு வாழ்க்கை ஓர் உற்சாகமான, சவால்நிறைந்த, மனநிறைவான ஒன்றாக இல்லாமல் கழிந்து விடுகிறது. ஆனால், நாம் சாதிக்கக்கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. இளையோர் அமர்ந்திருக்கும் பயம் என்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறந்து, சுதந்திரப் பறவைகளாய், பெருமிதத்தோடு தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். ஆம். நாம் சாதிக்க பிறந்தவர்கள்.

அன்பர்களே, நாம் சாதிக்க பிறந்தவர்கள்! சாதிக்காகப் பிறந்தவர்கள் அல்ல. சாதிக்குப் பிறந்தவர்கள் எனபதை மறந்து, சாதிக்கப் பிறந்தவர்கள் என்று எப்போது உணர்கிறோமோ, அன்றுதான் சமூகம் உருப்படும் என்று, முகநூலில் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. அதற்கு ஒரு பின்னணியும் இருந்தது. அதை வாசித்தபோது மனதுக்குச் சங்கடமாகவும் இருந்தது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நிறைவடைந்த ரியோ கோடைகால ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக், அடுத்து, மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.சிந்து போன்ற இவர்களின் ஒலிம்பிக் சாதனை, நாட்டுக்கே மகிழ்வைத் தந்தது. அரசுகளும் பரிசுத் தொகைகள், அரசு வேலை வாய்ப்புகள் என்று அறிவித்து, இவர்களின் வெற்றியைக் கௌரவப்படுத்தின. அதேநேரம், சிந்து என்ன சாதி என்று, இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பேர் தேடியதாகவும், சாக்‌ஷி மாலிக் அவர்கள் பெயரைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒரு மதத்தவர், அவர் தங்கள் மதத்தவர் என்பதற்காகவே பாராட்டியதாகவும் ஒரு வலைத்தளத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வீரர்கள், யாராக இருந்தாலும், எந்த மதத்தவராக, எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களைக் கௌரவித்து, கொண்டாட வேண்டியது நம் எல்லாரின் கடமை. ஒரு திறமைசாலியை, ஒரு சாதனையை அங்கீகரிக்கக்கூடவா சாதியும் மதமும் குறுக்கே வருகிறது என்று நினைக்கும்போது, இது பெரிய கேவலம் என ஓர் ஆர்வலர்(சக்தி விகடன்) ஆதங்கப்பட்டிருக்கிறார்.

அன்பர்களே, கின்னஸ் சாதனை முயற்சியாக, திண்டுக்கல் நகரில் ஒரே நேரத்தில், ஒரு மணிநேரத்தில், 6,697 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர் என்று, இந்த செப்டம்பர் 7ம் தேதி ஒரு செய்தி வெளியானது. நாட்டில், விபத்து மற்றும் நோய்கள் அதிகரித்துள்ள நிலையில், உடல் உறுப்புகளின் தேவையும் பெருகிக் கொண்டே செல்வதை உணர்ந்து, எளிய மக்களுக்கு உதவும் விதத்தில் இந்நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அன்பர்களே, இவர்கள், சாதி பார்த்தா இந்தத் தானத்தைச் செய்தார்கள்? இவர்களின் உறுப்புகள் இவர்களைச் சேர்ந்த சாதியினருக்கா பொருத்தப்படும்? சிந்திப்போம். 

"நல்வழி" என்னும் நூலில் ஔவையார் அவர்கள், சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில், இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ளபடி’என்று எழுதியுள்ளார். மக்களில் இரண்டே "சாதி"கள்தான் உள்ளன. நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவு. நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவு என்றார் ஔவையார். எனவே, நாம் என்ன சாதிக்குப் பிறந்தோம் என்று பார்ப்பதை விட்டுவிட்டு, என்ன சாதிக்கப் பிறந்தோம் என்று பார்ப்போம். நாம் சாதியைப் பார்த்து வாழப் பிறந்தவர்கள் அல்ல, ஆனால் நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.