2016-09-12 16:25:00

திருத்தந்தை: திருஅவையை பிளவின்றி காப்பது, கிறிஸ்தவரின் கடமை


செப்.12,2016. பிரிவினைகள் வழியே திருஅவை அழிந்துபோவதை யாரும் அனுமதிக்கக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரையில், திருஅவைக்குள் உருவாகும் பிரிவினைகள் குறித்துப் பேசினார்.

திருஅவைக்குள் உருவாகும் பிளவுகள், திருஅவையின் வளர்ச்சியைத் தடை செய்வதுடன், இறைவனது உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளன என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.

கிறிஸ்தவ சமுதாயத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஒன்றிப்பின் ஆதாரத்திலேயே தீயோன் புகுந்து, ஒருவருக்கு எதிராக மற்றவரைத் தூண்டிவிடுகிறான் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருத்து வேறுபாடுகளால், பேராசைகளால், பொறாமையால் ஏற்படும் முரண்பாடுகளையும், பிளவுகளையும் செபத்தின் வழியே வெற்றிகொள்ள முடியும் என்றார்.

பிரிவினைகள், மற்றும் பணம் இவற்றின் துணைகொண்டே, சாத்தான் திருஅவையை அழிக்க முயல்கிறான் என்பதை மையமாக வைத்து மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பிளவுகள் அதிகமாய் வேரூன்றிவிடாமல் காப்பது, அனைத்து கிறிஸ்தவரின் கடமை என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.