2016-09-10 15:09:00

பொறுமையுடன் ஒன்றுசேர்ந்து நடப்பதன் வழியாக ஒன்றிப்பு


செப்.10,2016. கிறிஸ்தவ சபைகள் மத்தியிலான ஒன்றிப்பை, பொறுமையுடன் ஒன்றுசேர்ந்து நடப்பதன் வழியாக எட்ட முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபை போதகர்களிடம் கூறினார்.

இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை போதகர் ஜொவான்னி த்ரத்தினோ அவர்கள் தலைமையில் வந்த ஏழு பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபை போதகர்களை, வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இவ்வியாழன் மாலையில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கருக்கும், பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் உரையாடலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சகோதரர் மற்றும் ஒரு நண்பராக ஆற்றிவரும் பணிக்கு நன்றி தெரிவித்தார் போதகர் த்ரத்தினோ.

இதற்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சபைகள் மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களை, தான் சந்தித்துள்ளதை எடுத்துக்காட்டாகக் கூறி, பொறுமை மற்றும் தொடர் பயணத்தின் வழியாக, படிப்படியாக ஒன்றிப்பை அடைய முடியும் என்று தெரிவித்தார்.

இத்தாலியின் கசெர்த்தாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை, இக்கிறிஸ்தவ சபையினரைச் சந்தித்து தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் நோக்கத்தில், இச்சந்திப்பு இடம்பெற்றது என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.