2016-09-09 16:43:00

திருத்தந்தையின் சுவீடன் திருத்தூதுப் பயண விபரங்கள்


செப்.09,2016. லூத்தரன் சீர்திருத்த சபை உருவானதன் 500ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு, வருகிற அக்டோபர் மாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டுக்கு, இரண்டு நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்கள் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

அக்டோபர் 31, திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு, உரோம் Fiumicino விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, சுவீடன் நாட்டின்  Malmö நகரை, பகல் 11 மணிக்குச் சென்றடைவார். அங்கு நடக்கும் அதிகாரப்பூர்வ வரவேற்பிற்குப் பின்னர், அதற்கருகிலுள்ள Lund நகருக்குச் சென்று, சுவீடன் அரச குடும்பத்தினரை மரியாதையின்பேரில் சந்திப்பார்.

பின்னர், Lund பேராலயத்தில், லூத்தரன் சபைத் தலைவர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொள்வார் திருத்தந்தை. அன்று மாலையில், Malmöவில், மற்றுமொரு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருத்தந்தை, இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.

நவம்பர் முதல் தேதி செவ்வாய் காலையில், Malmöல் சுவீடன் கத்தோலிக்க சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை 3.30 மணிக்கு, உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.