2016-09-09 16:21:00

திருத்தந்தை - நற்செய்தி அறிவிப்புப்பணி ஒரு கலை


செப்.09,2016. நற்செய்தி அறிவிப்புப்பணி ஒரு கலையாகும், இந்தப் பணியை பூங்காவில் நடக்கும், ஒரு நடைப்பயணமாக ஒருபோதும் கருதக் கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு என்றால் என்ன, அப்பணியை எப்படி ஆற்றுவது என்ற கேள்விகளுக்கு, பவுலடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து (1கொரி.9:16-19,22-27) எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை.

நற்செய்தி அறிவிப்புப்பணி, பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல, எனினும் இக்காலத்தில், சேவையில் தங்கள் வாழ்வைச் செலவழிக்கும் சில கிறிஸ்தவர்கள், அதை பெருமைப்படுத்திக் கொள்வது கவலை தருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தி அறிவிப்பது என்பது, அதிகமான வார்த்தைகளின்றி, சான்று பகர்வதாகும், மற்றவர் நிலையில் நம்மை வைப்பதாகும் என்றும் கூறிய திருத்தந்தை, அப்பணியை இலவசமாக ஆற்ற வேண்டும் என்றும் கூறினார். 

கிறிஸ்துவை அறிவிப்பது விசுவாசத்தை வாழ்வதாகும், கடவுளின் அன்பை சுதந்திரமாக வழங்குவது என்றும் கூறிய திருத்தந்தை, இந்நாளையப் புனிதர் பீட்டர் கிளேவர் பற்றியும் மறையுரையில் நினைவுகூர்ந்தார். ஒரு மறைப்பணியாளரான இப்புனிதர், தனது வருங்கால வாழ்வு போதிப்பதே என்பதை உணர்ந்தார், ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக வந்த கறுப்பினத்தவர்க்கு, ஒதுக்கப்பட்ட இம்மக்களுக்குப் பணியாற்ற கிறிஸ்து இவரை அழைத்தார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.