2016-09-09 16:16:00

ஓர் ஆயருக்கு மிகவும் நெருங்கிய அயலவர் அருள்பணியாளரே


செப்.09,2016. ஓர் ஆயருக்கு மிகவும் நெருங்கிய அயலவர் அருள்பணியாளரே என்பதை மறக்க வேண்டாம், அதேநேரம், ஒவ்வோர் அருள்பணியாளரும், தனது ஆயரின் அருகாமையை உணர வேண்டும் என்று, ஓர் ஆயர் குழுவிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக அளவில் ஆயர்களாக நியமனம் பெற்ற 90க்கும் மேற்பட்ட ஆயர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஆயருக்கும், அருள்பணியாளருக்கும் இடையே இருக்க வேண்டிய நெருங்கிய உறவு பற்றி வலியுறுத்தினார்.

ஓர் ஆயர், அருள்பணியாளரின் தொலைபேசி அழைப்புக்கும், அவரிடமிருந்து வரும் கடிதத்திற்கும் உடனடியாக, இயலுமானால், அதே நாளில் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்த ஒரு நெருக்கம், குருத்துவக் கல்லூரியிலிருந்தும், குருத்துவ உருவாக்கும் பயிற்சியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும், இந்த ஆரம்பம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.

ஆயர்கள் ஆற்றும் நற்செய்தி அறிவிப்புப்பணியும், அவர்கள் ஊக்குவிக்கும் மற்ற மேய்ப்புப்பணி நடவடிக்கைகளும், ஏற்கனவே நிலவும் அல்லது புதிதாக உருவாகும் பிளவுகளால் சேதப்படுத்தப்படாமல் இருப்பதில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பிளவுகள், பணம் ஆகிய இரு முக்கிய ஆயுதங்களை சாத்தான் திருஅவைக்குள் கொண்டிருந்து, அழிக்கின்றது எனவும், சாத்தான் பணப்பைக்குள் நுழைந்து, பேச்சாலும், பிளவுகளை ஏற்படுத்தும் புறணியாலும் அழிக்கின்றது, புறணி பேசுபவர், குண்டுகளைப் போடும் பயங்கரவாதியாகும், புறணி பேசும் பழக்கம், ஒரு பயங்கரவாதப் பழக்கம், இது அழிவைக் கொணரும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளவுகளுக்கு எதிராகப் போராடுங்கள், ஏனென்றால், இவை, தலத்திருஅவையையும், உலகளாவியத் திருஅவையையும் அழிப்பதற்கு சாத்தான் எடுக்கும் ஆயுதங்களில் ஒன்று என்றும், புதிய ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தச் சவால்களைத் தீர்ப்பது கடினம்தான், ஆனால்,  இறையருள், செபம், தபம் ஆகியவற்றின் வழியாக இயலும் என்றும், ஆயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களையும், அருள்பணியாளர்களையும், குருத்துவ மாணவர்களையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும், இதுவே ஆயர்களின் பணி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம் உரோம் நகரில் நடத்தும்   இக்கருத்தரங்கில், ஆப்ரிக்காவின் 19 நாடுகளிலிருந்து 42, ஆசியாவின் 9 நாடுகளிலிருந்து 36,  அமெரிக்காவின் 9 நாடுகளிலிருந்து 12, ஓசியானியாவின் 2 நாடுகளிலிருந்து 4 என, கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக நியமனம் பெற்ற ஆயர்கள் கலந்துகொள்கின்றனர்.

மறைப்பணித்தளங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலிருந்து இந்த ஆயர்கள் வந்திருக்கும் காரணத்தினால், நற்செய்தி அறிவிப்புப்பணியை முதலிடத்தில் வைக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது என்றும், நல்ல ஆயர் கிறிஸ்துவைப் போன்று, இவர்கள் தங்களின் மந்தைகள் மீது அக்கறை காட்ட வேண்டும், ஆடுகளை, குறிப்பாக, காணாமல்போன அல்லது தொலைதூரத்தில் உள்ள ஆடுகளைத் தேடிச் செல்ல வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார். கிறிஸ்துவின் மந்தையை இன்னும் சேராமல் இருக்கும் ஆடுகளைச் சந்திக்கவும் ஊக்கப்படுத்திய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புப்பணி, இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள் அல்லது அவரை எப்போதும் புறக்கணிப்பவர்களோடும் முக்கியமாக தொடர்புடையது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்..

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.