2016-09-08 16:03:00

மத்தியக் கிழக்கு சபைகளின் 11வது பொதுக்கூட்டம்


செப்.08,2016. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில், "மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்" என்று, எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, மூன்றாம் தியோஃபிலஸ் அவர்கள் கூறினார்.

மத்தியக் கிழக்கு சபைகளின் 11வது பொதுக்கூட்டம், செப்டம்பர் 6, இச்செவ்வாயன்று ஜோர்டன் நாட்டின் அம்மான் நகரில் துவங்கியபோது, இந்த உயர் மட்டக் குழுவின் தற்போதையத் தலைவர், முதுபெரும் தந்தை மூன்றாம் தியோஃபிலஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு" (திருப்பாடல் 118) என்ற மையக்கருத்துடன் நடைபெற்றுவரும் இந்தப் பொதுக் கூட்டத்தில் 22 சபைகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று ஃபிதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது, இப்பகுதியில் பணியாற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் தலையாயக் கடமை என்றும், இப்பணிக்கு ஒரு முக்கிய கருவியாக, கிறிஸ்தவ, இஸ்லாமிய உரையாடலை வளர்க்கவேண்டும் என்றும் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோஃபிலஸ் அவர்கள், தன் துவக்க உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.