2016-09-08 15:36:00

திருத்தந்தை - ஓசை நிறைந்த உலகில், அமைதிக்கும் இடம் உள்ளது


செப்.08,2016. இறைவனது இரக்கத்தின் முகமாக விளங்கும் கிறிஸ்துவை ஆழமாக உணர்வதற்கும், அவரை உலகிற்குக் காட்டுவதற்கும் செபத்திலும், தவத்திலும் ஈடுபட்டுள்ள துறவு வாழ்வு உறுதியான ஒரு வழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித பெனடிக்ட் நிறுவிய துறவு சபையைச் சேர்ந்த இருபால் துறவியர், உரோம் நகரில் மேற்கொண்டுள்ள மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிரதிநிதிகளை, இவ்வியாழன் நண்பகல் வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கென வழங்கப்பட்டுள்ள 'தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல்' என்ற விருதுவாக்கை வாழ்ந்துவரும் புனித பெனடிக்ட் துறவு சபைக்கு நன்றி கூறினார்.

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் அதிகமாகத் தேவைப்படும் இரக்கத்தை, திருஅவை, தன் வாழ்வாலும், பணிகளாலும் வெளிப்படுத்தும்போதுதான் ஒரு சாட்சியமாக அது இவ்வுலகில் திகழமுடியும் என்று கூறியத் திருத்தந்தை, பெனடிக்ட் சபை துறவியர், இந்த சாட்சியத்திற்கு சக்திவாய்ந்த அடையாளங்களாகத் வாழமுடியும் என்று எடுத்துரைத்தார்.

ஓசை நிறைந்த இவ்வுலகில், ஆழ்நிலை தியானத்திற்கும், விளம்பரம் தேடாத அமைதியான பணிகளுக்கும் இடம் உள்ளது என்பதை உலகிற்கு காட்டும் உன்னத பணியில் ஈடுபட்டிருக்கும் பெனடிக்ட் சபை துறவியரை தான் பாராட்டுவதாக திருத்தந்தை கூறினார்.

இளையோரை நல்வழியில் ஆற்றுப்படுத்தும் பணிகளுக்காகவும், கீழை வழிபாட்டு முறை சபைகளோடு இத்துறவு சபையினர் கொண்டுள்ள உரையாடல் பணிகளுக்காகவும் திருத்தந்தை தன் உரையில் நன்றி கூறினார்.

கடவுளை மறந்து வாழும் இவ்வுலகிற்கு, ஒவ்வொருநாளும் இறைவனை நினைவுபடுத்த புனித பெனடிக்ட் துறவு சபையினர் ஆற்றிவரும் செபம், மற்றும் பணிவாழ்வு மிகுந்த சக்தி வாய்ந்தவை என்று தன் உரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.