2016-09-08 15:51:00

திருஅவை தொடர்பு முறைகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள்


செப்.08,2016. கத்தோலிக்கத் திருஅவை, உலக மக்கள் அனைவரோடும் தொடர்பு கொள்வதில் ஆர்வமாக உள்ளது என்பதற்கு, சமூக வலைத்தளங்களில் திருத்தந்தையின் பங்கேற்பு ஒரு தெளிவான அடையாளம் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் கூறினார்.

"திருஅவை, மிக நெருக்கமாக" ("Church Up Close") என்ற தலைப்பில், உரோம் நகரின் புனித சிலுவை பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் Burke அவர்கள், நடைபெறும் யூபிலி ஆண்டின் நிகழ்வுகள், உலக ஊடகங்களின் கவனத்தை அடிக்கடி ஈர்த்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் வத்திக்கானின் தொடர்பு முறைகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் கூறிய Burke அவர்கள், ஊடக உலகின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, வத்திக்கான் தொடர்புத் துறையும் மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது என்று கூறினார்.

ஊடகங்களைப் பொருத்தவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்கள் மட்டுமல்லாமல், அவர் மேற்கொள்ளும் பரிவானச் செயல்களும், இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கு கூடுதல் பொருள் தருகின்றன என்பதை, Burke அவர்கள், இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தனக்கு முன் திருப்பீடச் செய்தித் தொடர்பாளராக, பல ஆண்டுகள் பணியாற்றிய இயேசுசபை அருள்பணி ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள், தன் பணிக்கு பெரும் உந்துசக்தியாக விளங்குகிறார் என்று Burke அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.