2016-09-08 16:09:00

சுத்தமான சக்தியைப் பயன்படுத்தும் 2000 கத்தோலிக்க பங்குகள்


செப்.08,2016. இங்கிலாந்தில் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கப் பங்குத்தளங்கள், இயற்கை சார்ந்த, மறுசுழற்சி செய்யக்கூடிய சக்திகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன என்று தலத்திருஅவை அறிவித்துள்ளது.

'நமது பொதுவான இல்லத்தைப் பேணிக்காக்க' என்ற கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலைத் தொடர்ந்து, கடந்த தவக்காலம் முதல் இங்கிலாந்தில் உள்ள பங்குத்தளங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டன.

'திருஅவையில் பெரும் மாற்றம்' ("Big Church Switch") என்ற விருதுவாக்குடன், கிறிஸ்தவ உதவி, மற்றும் CAFOD போன்ற அமைப்பினரின் முயற்சிகளால், மாற்று சக்திகளைப் பயன்படுத்தி, பங்குத்தளங்களும் ஏனைய நிறுவனங்களும் செயல்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

2000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கப் பங்குத்தளங்கள், நிறுவனங்கள், 700க்கும் அதிகமான ஏனைய கிறிஸ்தவ சபைகளின் நிறுவனங்கள், இன்னும் சமுதாய அக்கறை கொண்ட ஏனைய 900 அமைப்புக்கள் என, சுத்தமான சக்தியைப் பயன்படுத்தும் அமைப்புக்களின் எண்ணிக்கை 3,500க்கும் அதிகம் என்று Big Church Switch வலைத்தளம் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.