2016-09-07 16:38:00

‘ஞானமும், கருணையும்’ - பல்கலைக் கழகங்களின் யூபிலி


செப்.07,2016. செப்டம்பர் 7, இப்புதன் முதல், 10, இச்சனிக்கிழமை முடிய, பல்கலைக் கழகங்களின் யூபிலியும், ஆசிரியர்களின் 13வது பன்னாட்டு கருத்தரங்கும்  உரோம் நகரில், சிறப்பிக்கப்படுகின்றன என்று, கத்தோலிக்கக் கல்வி திருப்பீடப் பேராயம் அறிவித்துள்ளது.

இத்திருப்பீடப் பேராயம், உரோம் மறைமாவட்டம், மற்றும், இத்தாலிய கல்வித் துறை ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில், 1000த்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர் என்றும், 22 அமர்வுகள் கொண்ட இக்கருத்தரங்கில், 300க்கும் அதிகமானோர் உரைகள் வழங்கவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 வெள்ளியன்று மாலை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், கத்தோலிக்கக் கல்வி திருப்பீடப் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜியூசெப்பே வெர்ஸால்தி அவர்கள் நிகழ்த்தும் நிறைவுத் திருப்பலியில், கருத்தரங்கின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

‘ஞானமும், கருணையும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கின் சிகர நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10, சனிக்கிழமை வழங்கும் யூபிலி மறைக்கல்வி உரையில், இக்கருத்தரங்கின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.