2016-09-07 15:41:00

இரக்கத்தின் தூதர்கள் – புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா


செப்.07,2016. “உன்னிடம் வருகின்ற எவரும் மகிழ்வின்றி திரும்பிச் செல்லாதிருப்பார்களாக. கடவுளின் இரக்கத்தின் உயிருள்ள வெளிப்பாடாக இருங்கள். உங்கள் கண்களில், உங்கள் முகத்தில், உங்கள் புன்சிரிப்பில் இரக்கம் வெளிப்படட்டும்”.  இவ்வாறு சொன்னவர் புனித அன்னை தெரேசா. கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு, இன்னும், இவ்வாண்டில், கொல்கத்தா அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்பட்டது, ஆகிய இவை இரண்டின் அடிப்படையில், அன்புள்ளங்களே, இரக்கத்தின் தூதர்கள் என்ற புதிய தொடரைத் தொடங்கி, அதில் முதலில், இரக்கச் செயல்களில், நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாய்த் திகழும் புனித அன்னை தெரேசா பற்றி வழங்கினோம். இத்தொடரை நிறைவுசெய்து, இரக்கத்தின் தூதர்களாக வாழ்ந்து மறைந்துள்ள, சில தூயவர்கள் பற்றி இப்புதன் நிகழ்ச்சியிலிருந்து தொடங்குகிறோம். இறைஇரக்கப் பக்தி, உலகெங்கும் மிகவும் புகழ் அடைவதற்குக் காரணமான போலந்து நாட்டுப் புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா(St.Maria Faustina Kowalska) அவர்கள் வாழ்விலிருந்து இதை ஆரம்பிக்கிறோம். இப்புனிதர் “இறைஇரக்கத்தின் திருத்தூதர்” என அழைக்கப்படுகிறார். இறைஇரக்க இயேசுவின் திருவுருவம் வரையப்படுவதற்குக் காரண கர்த்தாவும் இவர்தான். இவர் தனது வாழ்வில் இயேசுவை பலமுறை காட்சி கண்டு, அவரோடு பேசியிருக்கிறார். இயேசுவின் அறிவுரைப்படி அக்காட்சிகள் பற்றி நாள்குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறார். இச்சகோதரி 3ம் வகுப்புவரை மட்டுமே படித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.    

போலந்து நாட்டின் தென்மேற்கேயுள்ள Głogowiec எனும் ஊரில், ஓர் ஏழை, ஆனால்,  பக்தியுள்ள விவசாயக் குடும்பத்தில், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார் மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா. இவரது இயற்பெர் ஹெலேனா கோவால்ஸ்கா. ஸ்தனிஸ்லாவ் கோவால்ஸ்கா, மரியன்னா கோவால்ஸ்கா தம்பதியருக்குப் பிறந்த பத்து குழந்தைகளுள் மூன்றாவது குழந்தை இவர். ஸ்தனிஸ்லாவ் கோவால்ஸ்கா, ஒரு தச்சுத் தொழிலாளி. ஒருநாள், திருநற்கருணை ஆராதனை வழிபாட்டில் செபித்துக்கொண்டிருந்தபோது, துறவற வாழ்வுக்கான அழைப்பை உணர்ந்தார் ஹெலேனா. ஏழு வயதே ஆன ஹெலேனாவின் இந்த விருப்பத்திற்கு, பெற்றோர் இணங்கவில்லை. எனவே, தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்காக, இவர் தனது 16வது வயதில், லோட்ஸ் நகர் சென்று, வீட்டுவேலை செய்தார். 1924ம் ஆண்டில், இவருக்கு 19 வயது நடந்தபோது, தனது சகோதரி நத்தாலியாவுடன், லோட்ஸ் நகர் பூங்காவில், நடனம் ஆடச் சென்றார். நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, துன்புறும் இயேசுவைக் காட்சியில் கண்டார் ஹெலேனா. பின்னர் அந்நகர் பேராலயம் சென்று செபித்தார். அப்போது இயேசு அவரிடம், உடனே வார்சா நகர் சென்று, கன்னியர் இல்லத்தில் சேருமாறு பணித்தார். எனவே, அந்த இரவில், ஒரு சிறிய பையுடன், அங்கிருந்து 85 மைல் தூரத்திலுள்ள வார்சா நகருக்கு இரயில் ஏறி அடுத்த நாள் காலையில் சென்றடைந்தார். பெற்றோர் அனுமதியின்றி, ஒருவருக்கும் தெரியாமல் வார்சா சென்றார் ஹெலேனா.

ஹெலேனா, வார்சா சென்றதும், தான் முதலில் பார்த்த புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலியில் கலந்துகொண்டார். பங்குக் குரு Dąbrowski அவர்களின் ஆலோசனையின்பேரில், நம்பிக்கைக்குரியவரான திருமதி Lipszycowa அவர்களுடன் தங்கியிருந்தார் ஹெலேனா. அங்கிருந்து கொண்டே, வார்சாவில், பல கன்னியர் இல்லங்களின் கதவுகளைத் தட்டினார். ஹெலேனாவின் ஏழ்மைநிலை மற்றும் படிப்பறிவின்மையைப் பார்த்து, யாரும் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். பல வாரங்கள் தொடர் தேடலுக்குப் பின்னர், கடைசியாக, இரக்கத்தின் அன்னை மரியா சபை தலைமைச் சகோதரி அவரை ஏற்பதாகச் சொன்னார். ஆனால், ஹெலேனா, தனது துறவு ஆடைக்குரிய பணத்தை அவரே கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் தலைமைச் சகோதரி. ஆதலால், 1925ம் ஆண்டில், ஓராண்டு காலம் வீட்டுவேலை செய்து பணம் சேர்த்தார் ஹெலேனா. இறுதியாக, 1926ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி, தனது 20வது வயதில் துறவு உடையைப் பெற்று, திருநற்கருணையின் மரிய பவுஸ்தீனா என்ற புதிய பெயரைப் பெற்றார். பவுஸ்தீனா என்றால், அதிர்ஷ்டசாலி அல்லது ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அர்த்தமாகும். அருள்சகோதரி மரிய பவுஸ்தீனா, 1928ம் ஆண்டில், தனது முதல் வார்த்தைப்பாடுகளை எடுத்தார். இதில், அவரது பெற்றோரும் கலந்துகொண்டனர்.

அருள்சகோதரி மரிய பவுஸ்தீனா, 1929ம் ஆண்டு பிப்ரவரி முதல், ஏப்ரல் வரை, தற்போதைய லித்துவேனிய நாட்டின் வில்னியுஸ் நகர(வில்னியுஸ், அப்போதைய போலந்தின் வில்னோ) கன்னியர் இல்லத்தில் சமையல் வேலை செய்து வந்தார். பின்னர், ஓராண்டு கழித்து, மீண்டும் வில்னியுஸ் கன்னியர் இல்லத்திற்குத் திரும்பினார். அங்குதான், இவர், தனது இறைக்காட்சிகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்த அருள்பணி மிக்கேல் ஸ்போகோ(Michael Sopoćko) அவர்களைச் சந்தித்தார். பின்னர், 1930ம் ஆண்டு, மே மாதத்தில், போலந்தின் Płock நகருக்கு மாற்றப்பட்டார். இங்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இவர், தனது பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட துறவு வாழ்வில், கன்னியர் இல்லங்களில், சமையல், சுமை தூக்குதல் அல்லது காய்கறித் தோட்ட வேலைகளையே செய்தார். Płock நகரில் வாழ்ந்தபோது, அவரைத் தாக்கிய காசநோயின் முதல் அறிகுறி தெரிந்தது. இதனால், அவரது சபைக்குச் சொந்தமான ஒரு பண்ணையில் ஓய்வுக்காக இவர் அனுப்பப்பட்டார். பின்னர் குணமடைந்ததும், 1931ம் ஆண்டு பிப்ரவரியில், Płock நகருக்குத் திரும்பி, அங்கு ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் வாழ்ந்தார். இங்கு, அருள்சகோதரி பவுஸ்தீனா அவர்கள், “அது, 1931ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஞாயிறு....” என, தான் இயேசுவைக் காட்சியில் கண்டது பற்றி எழுதியிருக்கிறார். இக்காட்சி விபரம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.