2016-09-07 15:51:00

இது இரக்கத்தின் காலம்... – மகிழ்ச்சி பறிபோனது எப்படி?


ஓர் ஊரில் செல்வர் ஒருவரும் எழை ஒருவரும் அடுத்தடுத்து குடியிருந்தனர். செல்வரின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை. எழைக்குச் சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலியுடன் வீடு திரும்புவார். அவர், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும், படுத்தவுடன் தூங்கி விடுவார். ஆனால் செல்வரோ, எப்பொழுதும் பரபரப்புடனும் கவலையுடனும் காட்சி அளித்தார். தன் வீட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தார். திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினார். ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பிய அவர், ஏழையை அழைத்து, ‘நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன். உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன், நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து’ என்றார். அவரிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார். இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டார். தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினார் அவர். தன் மகிழ்ச்சிப் பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள்தான் என்ற உண்மையை உணர்ந்தார்.

பொழுது விடிந்ததும், பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு, செல்வரின் வீட்டிற்கு வந்த ஏழை, ‘ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதியையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’, என்று சொல்லி, பையை அவரிடம் தந்துவிட்டு, மகிழச்சியுடன் புறப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.