2016-09-06 16:17:00

மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் பொது அவை ஜோர்டனில்


செப்.,06,2016. மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் பதினோராவது பொது அவைக் கூட்டம் இச்செவ்வாய்க்கிழமையன்று ஜோர்டனின் அம்மனில் துவங்கியது.

எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில், அந்தியோக்கியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை, முன்னாள் முதுபெரும் தந்தை, சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, கிரேக்க மெல்கித்திய முதுபெரும் தந்தை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை ஆகியோருடன் பல்வேறு முக்கிய கிறிஸ்தவ சபைத் தலைவர்களும் பங்குகொள்கின்றனர்.

உள்நாட்டுச் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் நிலை, இஸ்லாமிய சமூகங்களுடன் பேச்சுவார்த்தைகள், போரால் பாதிக்கப்பட்டோருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் துயர்துடைப்புப்பணிகள், சிரியாவிலும் ஈராக்கிலும் மோதல்களை நிறுத்த அரசுகளின் முயற்சிகளை ஊக்குவித்தல் போன்றவை குறித்து இக்கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஞாயிறன்று, இப்பொது அவையில் பங்குகொள்வதற்கென ஜோர்டன் வந்த காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை இரண்டாம் துவாத்ரோஸ் அவர்களை வரவேற்ற ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஜோர்டன் உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.