2016-09-06 15:12:00

இது இரக்கத்தின் காலம் : கல்லறையில் வாழும் மனிதர்கள்


செப்டம்பர் 4ம் தேதி, அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நாள். செப்டம்பர் 5, திங்களன்று, புனித அன்னை தெரேசாவின் திருநாள். இவ்வேளையில், அந்த அன்னை உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையைச் சேர்ந்த நான்கு அருள் சகோதரிகள், 6 மாதங்களுக்கு முன், அதாவது, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டில், கொலையுண்ட நிகழ்வை நினைவில் கொணர்கிறோம். அவர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம், அவர்கள், இறைவனின் கருணைக்குச் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்பது ஒன்றே.

மனிதர்களாக வாழத் தகுதியற்றவர்கள் என்று சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ கல்லறைகளில் வாழ்வதுபோல், சேரிகளிலும், சாக்கடைகளிலும் புதைக்கப்பட்டுள்ள மனிதர்களைத் தேடிச்சென்று பணியாற்றும் அன்னை தெரேசா அருள் சகோதரிகளின் சேவையை விரும்பாத அடிப்படைவாதிகள், ஏமன் நாட்டில் நான்கு அருள் சகோதரிகளையும், அவர்களுடன் உழைத்த 12 பணியாளர்களையும் கொன்றனர்.

கெரசேனர் பகுதி கல்லறைகளில் வாழ்ந்த ஒருவரை, இயேசு மீண்டும் மனிதராக மாற்றிய புதுமையை நற்செய்தியில் வாசிக்கிறோம். (மாற்கு 5:1-20) இத்தகையக் கல்லறை வாழ்வு வாழ்வோருக்கு மனித மாண்பை வழங்க பணியாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.